தமிழ்நாடு

tamil nadu

திடீரென காங்கிரஸில் ஐக்கியமான ஒய்.எஸ்.ஷர்மிளா.. தெலங்கனா அரசியலில் நடப்பது என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 4, 2024, 11:58 AM IST

Updated : Jan 4, 2024, 12:41 PM IST

YS Sharmila: ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சித் தலைவர் ஒய்எஸ் ஷர்மிளா, அவரது கட்சியைக் காங்கிரஸ் உடன் இணைத்து விட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர், ராகுல் காந்தியைப் பிரதமர் ஆக்கும் தனது தந்தையின் கனவை நிறைவேற்றப் பாடுபடுவேன் எனத் தெரிவித்துள்ளார்.

YSR Telangana Party chief YS Sharmila has joined the Congress party
ஒய் எஸ் ஆர் தெலங்கானா கட்சித் தலைவர் ஒய் எஸ் ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்

டெல்லி: ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சித் தலைவரும், ஆந்திர மாநில முதலமைச்சர் ஒய்எஸ் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கையுமான ஒய்எஸ் ஷர்மிளா, அவரது கட்சியான ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியைக் காங்கிரஸ் கட்சியுடன் இணைத்து, அவரும் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் ஒய்எஸ் ஷர்மிளாவிற்கு கட்சி சால்வை அணிவித்து அவரை காங்கிரஸ் கட்சிக்கு வரவேற்றனர். புதன்கிழமை மாலை விஜயவாடாவிலிருந்து டெல்லி சென்ற ஒய்எஸ் ஷர்மிளா இன்று (ஜன.4) காலை அவரது கணவர் அணிலுடன் காங்கிரஸ் தலைமையகத்திற்குச் சென்றார்.

அங்கு நடைபெற்ற நிகழ்வில் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் முன்னிலையில் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஒய்எஸ் ஷர்மிளா, "ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியைக் காங்கிரஸ் கட்சியுடன் இணைத்து, காங்கிரஸ் கட்சியில் இணைவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ராகுல் காந்தியைப் பிரதமராக்க வேண்டும் என்கின்ற எனது தந்தையின் கனவை நிறைவேற்றப் பாடுபடுவேன்" எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஒய்எஸ் ஷர்மிளாவிற்கு தேசிய காங்கிரசில் பொறுப்பு வழங்குவார்களா அல்லது ஆந்திரப் பிரதேச காங்கிரசில் பொறுப்பு கொடுப்பார்களா என எதிர்பார்ப்பு கிளம்பத் துவங்கி உள்ளது. முன்னதாக, சமீபத்தில் தெலங்கானாவில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் போட்டியிடாமல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிப்பதாக ஒய்எஸ் ஷர்மிளா அறிவித்து இருந்தார். அந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று தெலங்கானாவில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆந்திர மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் அங்குத் தனது வலிமையைப் பெருக்கக் காங்கிரஸ் கட்சி ஒய்எஸ் ஷர்மிளாவிற்கு ஆந்திர மாநில காங்கிரசில் முக்கிய பொறுப்பு வழங்கி, ஆந்திராவில் மும்முனைப் போட்டியை ஏற்படுத்தும் என ஒரு தரப்பு அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மறுபுறம், அரசியலில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கவும், தனது அண்ணனுக்குப் போட்டியாக விளங்கக் கூடாது என்பதற்காகவும் தான் ஒய்எஸ் ஷர்மிளா, ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியை உருவாக்கினார். அதனால் அவர் ஆந்திர அரசியலில் தலையிட விருப்பம் தெரிவிக்க மாட்டார். தொடர்ந்து தெலங்கானா மாநில அரசியலில் தான் கவனம் செலுத்துவார் எனவும் கூறப்படுகிறது.

மேலும், தெலங்கானா மாநில காங்கிரசில் ஒய்எஸ் ஷர்மிளாவுக்கு பதவி கொடுக்கப்படும் பட்சத்தில் அம்மாநிலத்தில் உட்கட்சி பூசல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்த நிலையில் முதலமைச்சர் குறித்த அறிவிப்பு வெளியாகத் தாமதம் ஆகிக் கொண்டிருந்தது.

அப்போது ஒய்எஸ் ஷர்மிளா, தெலங்கானா காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ரேவந்த் ரெட்டியைத் தாக்கும் வகையில் உத்தம் குமார் ரெட்டி, மல்லு பாட்டி விக்ரமார்கா (Mallu Bhatti Vikramarka) போன்ற தலைவர்கள் முதல்வராக வேண்டும் எனக் கருத்து தெரிவித்திருந்தார்.

ரேவந்த் ரெட்டி மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஒய்எஸ் ஷர்மிளா இத்தகைய கருத்தைக் கூறியிருக்கலாம் என்றும், அதனால் அவருக்கு தெலங்கானா காங்கிரசில் பொறுப்பு வழங்கப்படும் பட்சத்தில் தெலங்கானா காங்கிரசில் புகைச்சல் ஏற்படலாம் எனவும் அரசியல் கூர் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: பொங்கல் பரிசு ரொக்கம் எங்கே? - ரூ.2 ஆயிரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

Last Updated : Jan 4, 2024, 12:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details