தமிழ்நாடு

tamil nadu

பாபா ராம்தேவின் அலோபதி சர்ச்சை... ஹர்ஷ் வர்தன் தலையீட்டால் முற்றுப்புள்ளி!

By

Published : May 24, 2021, 1:29 PM IST

அலோபதி மருந்தை விமர்சித்து சர்ச்சையில் சிக்கிய யோகா குரு பாபா ராம்தேவ், அதற்கு மன்னிப்பு தெரிவித்தது அவரின் முதிர்ச்சியைக் காட்டுவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ட்வீட் செய்துள்ளார்.

yoga guru
பாபா ராம்தேவ்

யோகா குரு பாபா ராம்தேவ் அண்மையில், “அலோபதி என்பது முட்டாள்தனமான அறிவியல் என்றும், இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் (DCGI) அங்கீகரித்த ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்துகள் கரோனாவை குணப்படுத்துவதில் தோல்வி அடைந்து விட்டன” என்று பேசியிருந்தார். இவரின் இக்கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு இந்திய மருத்துவர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும், இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பாபா ராம்தேவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "பாபா ராம்தேவ் கருத்துகள் கரோனாவுக்கு எதிராகப் போராடி வரும் மருத்துவர்களை அவமதிப்பதுடன் நாட்டு மக்களின் உணர்வுகளையும் காயப்படுத்தியுள்ளது. அவை சுகாதாரப் பணியாளர்கள் மீதான மதிப்பைக் குலைக்கக்கூடியதுடன் கரோனாவுக்கு எதிரான போராட்டத்தையும் பலவீனமாக்கும். அலோபதி மருந்துகள் கோடிக்கணக்கான கரோனா நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளது. தங்கள் கருத்துகள் மிகவும் துரதிருஷ்டவசமானது. அவற்றைத் திரும்பப் பெற வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, பாபா ராம்தேவ் தனது கருத்தைத் திரும்பப் பெறுவதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், "மத்திய அமைச்சரின் கடிதம் கிடைத்தது. நவீன மருத்துவ அறிவியல் மற்றும் அலோபதியை நாங்கள் எதிர்க்கவில்லை. எல்லா வகையான மருத்துவத்தையும் மதிக்கிறேன். எனது கருத்துகள் யாருடையாவது உணர்வைப் புண்படுத்தியிருந்தால் மன்னித்துவிடுங்கள். பல்வேறு மருத்துவ முறைகள் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், எனது கருத்தைத் திரும்பப் பெறுகிறேன்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து அவருக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன், " அலோபதி மருத்துவத்திற்கு எதிரான கருத்தைப் பாபா ராம்தேவ், திரும்பப் பெற்றது அவரின் முதிர்ச்சியைக் காட்டுகிறது. இவ்விவகாரம் குறித்த சர்ச்சையைத் தடுத்து நிறுத்தியது பாராட்டத்தக்கது" எனப் பதிவிட்டுள்ளார்.

கடந்தாண்டு, கரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாகக் கூறிய பாபா ராம்தேவ், "கொரோனில் அண்ட் ஸ்வாசரி' (Coronil and Swasari)" என்ற ஆயுர்வேத மருந்தை ஹரித்வாரில் அறிமுகப்படுத்தினார். அறிமுக விழாவில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தான், தற்போது அலோபதி மருந்துவ சிகிச்சை விவகாரத்தில் பாபா ராம்தேவ்-வுக்கு எதிராக குரல் ஏழுப்பினார். அமைச்சரின் தலையீட்டின் காரணமாக, பாபா ராம்தேவ் உடனடியாக கருத்தை திரும்பப்பெற்றது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details