தமிழ்நாடு

tamil nadu

சித்தராமையா அமைச்சரவையில் ஜெகதீஷ் ஷெட்டருக்கு அமைச்சர் பதவியா? வாய்ப்பு இருக்கிறதா?

By

Published : May 20, 2023, 9:36 AM IST

பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்து தோல்வி அடைந்த மூத்த தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் அமைச்சராக பதவி ஏற்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பாஜகவில் இருந்து விலகிய ஜெகதீஷ் ஷெட்டருக்கு அமைச்சர் பதவியா?
பாஜகவில் இருந்து விலகிய ஜெகதீஷ் ஷெட்டருக்கு அமைச்சர் பதவியா?

பெங்களூரு:நடைபெற்று முடிந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில், 135 இடங்களைக் கைப்பற்றிய காங்கிரஸ் தனிப் பெரும்பான்மை உடன் ஆட்சி அமைக்க உள்ளது. இதனிடையே 4 நாட்களாக நீடித்த இழுபறியின் முடிவில், கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக முன்னாள் முதலமைச்சரும், மூத்த தலைவருமான சித்தராமையா இன்று (மே 20) பதவி ஏற்க உள்ளார்.

அதேபோல், கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார் துணை முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார். பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீரவா ஸ்டேடியத்தில் வைத்து நடைபெற உள்ள பதவி ஏற்பு நிகழ்வில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு எதிர்கட்சி முக்கிய பிரமுகர்களுக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.

இதற்காக, முதலமைச்சர் ஸ்டாலின் நேற்றைய தினமே (மே 19) பெங்களூரு சென்றுள்ளார். இதனிடையே, இன்று நடைபெற உள்ள பதவி ஏற்பு விழாவில், சித்தராமையாவின் அமைச்சரவையில் 20 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே, நேற்றைய தினம் சித்தராமையா மற்றும் டிகே சிவகுமார் ஆகிய இருவரும், அமைச்சரவையில் இடம் பெற உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் பரிந்துரை பட்டியலோடு சிறப்பு விமானம் மூலம் டெல்லி சென்றனர். அங்கு இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினர்.

இதன் பிறகு சித்தராமையா மற்றும் டிகே சிவகுமார் ஆகிய இருவரும், இன்று காலை பெங்களூரு வந்தடைந்தனர். இதனிடையே, மூத்த அரசியல் பிரமுகர் ஜெகதீஷ் ஷெட்டர் அமைச்சரவையில் இடம் பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனை ஒட்டி, நேற்று முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள சித்தராமையாவை ஜெகதீஷ் ஷெட்டர் சந்தித்துப் பேசினார்.

எனவே, இந்த சந்திப்பின் மூலம் ஜெகதீஷ் ஷெட்டர் கர்நாடக அமைச்சரவையில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அங்கிருந்து வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜெகதீஷ் ஷெட்டர், "முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சித்தராமையாவுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவிக்க நான் வந்தேன். நான் வேறு எதைப் பற்றியும் ஆலோசனை செய்யவில்லை.

கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் மற்றும் மூத்த தலைவர்களின் முடிவுக்கு நான் கட்டுப்படுகிறேன். நான் எந்தப் பதவிக்கும் ஆசைப்படுபவன் அல்ல" என தெரிவித்தார். முன்னதாக, கர்நாடகாவின் மத்திய ஹூப்பள்ளி - தார்வாட் தொகுதியில் பாஜக சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஜெகதீஷ் ஷெட்டர், பாஜகவில் சீட் தராததால், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார்.

இதனையடுத்து ஜெகதீஷ் ஷெட்டருக்கு காங்கிரஸ் வாய்ப்பு கொடுத்த நிலையிலும், அவர் தோல்வியைத் தழுவினார். இருப்பினும், அவருக்கு தற்போது அமைச்சர் பதவி கொடுத்தால், அடுத்த 6 மாதங்களுக்குள் சட்டமன்ற உறுப்பினராகவோ அல்லது விதான் பரிஷத்தில் உறுப்பினராகவோ ஆக வேண்டும்.

ஆனால், தற்போதைய நிலையில் மாநிலத்தின் எந்தவொரு தொகுதியிலும் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை. இருப்பினும், இவர் ஒருவேளை அமைச்சரவையில் இடம் பெற்றால், எம்எல்சி ஆக வாய்ப்புகள் உள்ளது என கூறப்படுகிறது.

இதையும் படிங்க:சித்தராமையா பதவியேற்பு விழா : 8 மாநில முதலமைச்சர்களுக்கு அழைப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

ABOUT THE AUTHOR

...view details