தமிழ்நாடு

tamil nadu

ஒடிசா ஹனுமன் ஜெயந்தி பேரணியில் கல்வீச்சு; 43 பேர் கைது - 48 மணிநேரத்துக்கு இணைய சேவை முடக்கம்

By

Published : Apr 13, 2023, 9:05 PM IST

ஒடிசா மாநிலம், சாம்பல்பூரில் ஹனுமன் ஜெயந்தி பேரணியின்போது ஏற்பட்ட வன்முறை தொடர்பாக 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 48 மணி நேரத்துக்கு இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.

Odisha attack
ஒடிசாவில் வன்முறை

சாம்பல்பூர்:ஒடிசா மாநிலம், சாம்பல்பூரில் ஹமனுன் ஜெயந்தி நாளை (ஏப்ரல் 14) வரை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு புதன்கிழமை மாலை இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. இதில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது இருதரப்பினர் இடையே வன்முறை ஏற்பட்டது.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், பேரணி சென்று கொண்டிருந்தபோது மற்றொரு தரப்பினர் கல்வீச்சு தாக்குதல் நடத்தியது தெரியவந்துள்ளது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல், வன்முறையாக வெடித்தது. ஏராளமான இருசக்கர வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. கார்கள் மற்றும் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன.

இச்சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவத்தில் போலீசார் 10 பேர் காயம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே, ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சிலர் விஷம கருத்துகளைப் பகிர்ந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சாம்பல்பூர் மாவட்டத்தில் 48 மணி நேரம் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டி.கே.சிங் கூறுகையில், "சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்கள் மூலம் தேவையற்ற கருத்துகள் பரப்பப்படுவதை தடுக்கும் வகையில் இன்று (ஏப்ரல் 13) முதல் 48 மணி நேரத்துக்கு இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது" என்றார்.

இதற்கிடையே, சாம்பல்பூர், தனுபலி, பரேய்பலி உள்ளிட்ட 6 காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடங்களில், 48 மணி நேரத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர். வன்முறைச் சம்பவம் தொடர்பாக 43 பேரை கைது செய்துள்ள போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சி - சீதாராம் யெச்சூரி, டி.ராஜாவுடன் நிதிஷ் சந்திப்பு!

ABOUT THE AUTHOR

...view details