தமிழ்நாடு

tamil nadu

சிங்கப் பெண் வந்தனா கட்டாரியாவுக்கு ரூ.25 லட்சம் பரிசு!

By

Published : Aug 7, 2021, 4:33 PM IST

Updated : Aug 7, 2021, 4:48 PM IST

இந்திய மகளிர் ஹாக்கி அணி வீராங்கனை வந்தனா கட்டாரியாவுக்கு 25 லட்ச ரூபாய் பரிசுத் தொகையை அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் டாமி அறிவித்துள்ளார்.

Vandana Katariya
Vandana Katariya

டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் நேற்று (ஆக.06) நடைபெற்ற மகளிர் ஹாக்கி அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி அர்ஜென்டினா அணியிடம் தோல்வியடைந்ததை அடுத்து, ஒரு சிலர் ஹாக்கி வீரர் வந்தனா கட்டாரியாவின் வீட்டின் அருகில் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.

ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரான வந்தனா கட்டாரியாவை அணியிலிருந்து நீக்க வேண்டும் எனக் கூறி அவரை சாதியரீதியாக இழிவுப்படுத்தியும் கூச்சலிட்டுள்ளனர்.

டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் வந்தனா ஹாட்ரிக் கோல் அடித்து, இந்திய மகளிர் ஹாக்கி அணி காலிறுதிக்குத் தகுதி பெற வந்தனா பெரும் பங்காற்றிய நிலையில், அவர்மீது நிகழ்த்தப்பட்ட இந்த சாதியரீதியிலான தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தொடர்ந்து வந்தனாவின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில் நேற்று (ஆக.06) ஒருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

முதலமைச்சர் பாராட்டு

இந்நிலையில், உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் டாமி, டோக்கியோ ஒலிம்பிக்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய மகளிர் ஹாக்கி அணி வீராங்கனை வந்தனா கட்டாரியாவுக்கு 25 லட்ச ரூபாய் பரிசுத் தொகை அறிவித்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் உத்தரகாண்டின் மகளும் இந்திய மகளிர் ஹாக்கி அணி வீரருமான வந்தனா கட்டாரியாவின் சிறப்பான ஆட்டத்தால் மாநிலமே பெருமைப்படுவதாகவும் புஷ்கர் சிங் டாமி தெரிவித்துள்ளார்.

மேலும், விரைவில் புதிய, கவர்ச்சிகரமான விளையாட்டுக் கொள்கை மாநிலத்தில் செயல்படுத்தப்படும் என்றும், புதிய கொள்கை, குறிப்பாக நமது இளைஞர்களிடையே சர்வதேச அளவிலான திறமைகளை வளர்ப்பதற்கு சரியான நிதி ஊக்கங்களை அளிக்கும் என்றும் அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்று (ஆக.07) ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டாரும், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனும் இதே போல் தங்கள் மாநிலங்களைச் சேர்ந்த இந்திய மகளிர் ஹாக்கி அணியின் வீராங்கனைகளுக்கு தலா 50 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது

இதையும் படிங்க:விருது பெயர் மாற்றியதைப் போல ஸ்டேடியம் பெயரையும் மாத்துங்க: ட்விட்டரில் அதகளம்

Last Updated :Aug 7, 2021, 4:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details