தமிழ்நாடு

tamil nadu

19 வயதுக்குட்பட்டோருக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் - இந்திய மகளிர் அணி சாம்பியன்!

By

Published : Jan 29, 2023, 7:58 PM IST

Updated : Jan 29, 2023, 8:27 PM IST

19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி, இந்திய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

இந்திய அணி சாம்பியன்
இந்திய அணி சாம்பியன்

தென் ஆப்பிரிக்கா:19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. கடந்த 14ஆம் தேதி தொடங்கிய தொடரில் 16 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. குரூப் பிரிவில் விளையாடிய இந்திய மகளிர் அணி தன் அபார ஆட்டத்தின் மூலம் அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.

அரையிறுதில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய 4 அணிகள் விளையாடின. நியூசிலாந்து அணியுடன் கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற அரை இறுதிப்போட்டியில், இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடர்ந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான இறுதிப்போட்டி போட்செப்ஸ்ட்ரூம் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய மகளிர் கேப்டன் ஷபாலி வர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து வீராங்கனைகள், இந்திய பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் விக்கெட் அணிவகுப்பு நடத்தினர்.

இந்திய மகளிரின் அபார பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல், 17.1 ஓவர்களில் இங்கிலாந்து அணி 68 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய வீராங்கனைகள் திதாஸ் சாது, அர்ச்சனா தேவி, பர்சவி சோப்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்து இங்கிலாந்து அணியை குறைந்த ரன்களில் சுருட்டினர்.

எளிதான ஸ்கோரை நோக்கி களமிறங்கிய இந்திய மகளிருக்கு ஆரம்பமே சறுக்கலாக அமைந்தது. தொடக்க வீராங்கனை ஸ்வேதா ஷெராவத் 5 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். தொடர்ந்து கேப்டன் ஷபாலி வர்மா 15 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து களமிறங்கிய இந்திய வீராங்கனைகள் சவுமியா திவாரி, கொங்கடி திரிசா ஆகியோர் இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

14 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 69 ரன்கள் குவித்த இந்திய மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று உலக கோப்பையை கைப்பற்றியது. இந்திய ஜூனியர் மகளிர் அணி கோப்பை வென்றதை அடுத்து பல்வேறு நகரங்களில் மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை பகிர்ந்தும் கோலாகலமாக கொண்டாடினர்.

2023ஆம் ஆண்டு முதல் முறையாக 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், முதல் தொடரிலேயே இந்திய ஜூனியர் மகளிர் அணி வெற்றி வாகைசூடி சாதனை படைத்துள்ளது.

பிசிசிஐ-யின் செயலாளர் ஜெய் ஷா, வெற்றி பெற்ற அணியினருக்கு ரூ.5 கோடி பரிசுத்தொகையினை அறிவித்துள்ளார். உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஜூனியர் மகளிர் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். வாழ்த்து பதிவில் "இந்திய வீராங்கனைகள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடியுள்ளனர். அவர்களின் வெற்றி பல வரவிருக்கும் கிரிக்கெட் வீரர்களுக்கு ஊக்கமளிக்கும். அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்" என தன் டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:Air Asia: கிளம்பிய சிறிது நேரத்தில் ஏர் ஏசியா விமானம் தரையிறக்கம்.. காரணம் என்ன?

Last Updated : Jan 29, 2023, 8:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details