தமிழ்நாடு

tamil nadu

ட்விட்டர் தலைமைப் பொறுப்பில் இந்தியர்: யார் இந்த பராக் அகர்வால்?

By

Published : Nov 30, 2021, 11:12 AM IST

பிரபல சமூக வலைதளமான ட்விட்டர் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜாக் டோர்சி (Jack Dorsey) சிஇஓ பொறுப்பிலிருந்து விலகிய நிலையில், இந்தியாவைச் சேர்ந்த பராக் அகர்வால் அப்பொறுப்பை ஏற்கவுள்ளார். யார் இந்த பராக் அகர்வால்? அவரைப் பற்றி காண்போம்.

சுந்தர் பிச்சை
சுந்தர் பிச்சை

சான் பிரான்சிஸ்கோ:உலகின் மிகவும் பிரபலமான சமூக வலைதளங்களில் ட்விட்டரும் ஒன்று. ட்விட்டர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலராக (CEO) ஜாக் டோர்சி செயல்பட்டுவந்தார்.

இதற்கிடையில், ட்விட்டர் சிஇஓ பதவியை ஜாக் டோர்சி நேற்று ராஜினாமா செய்தார். இதனையடுத்து, ட்விட்டர் நிறுவனத்தின் அடுத்த சிஇஓவாக இந்தியாவைச் சேர்ந்த பராக் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அனைவருக்கும் யார் இந்த பராக் அகர்வால் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட பராக் அக்ரவால் மும்பை ஐஐடியில் கணினி அறிவியல் பாடப்பிரிவில் பொறியியல் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். அத்துடன் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றார்.

ஜாக் டோர்சி - பராக் அகர்வால்

இவர், 2011ஆம் ஆண்டு அக்டோபரில் ட்விட்டரில் விளம்பரப் பொறியாளராகச் சேர்ந்தார். அவரது கடின உழைப்பால் விரைவில் அந்நிறுவனத்தின் சிறந்த மென்பொருள் பொறியாளர் என்ற இடத்தைப் பிடித்தார்.

பின்னர், ட்விட்டர் 2018இல் அதன் தலைமைத் தொழில்நுட்ப அலுவலராக பராக் அகர்வாலை நியமித்தது. ட்விட்டரில் சேருவதற்கு முன்னதாக இவர் யாஹூ, மைக்ரோசாஃப்ட், ஏ.டி. அண்ட் டி லேப்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றியிருக்கிறார்.

தற்போது ட்விட்டர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலராக பராக் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க டெக் நிறுவனம் ஒன்றுக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் தலைவராக நியமிக்கப்படுவது இது முதல்முறையல்ல.

சுந்தர் பிச்சை

ஏற்கனவே கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுந்தர் பிச்சை, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் சத்யா நாதெல்லா, ஐபிஎம் நிறுவனத்தில் அரவிந்த் கிருஷ்ணா, அடோப் நிறுவனத்தில் சாந்தனு நாராயணன் ஆகியோர் இருந்துவரும் நிலையில், தற்போது ட்விட்டரின் சிஇஓவாக பராக் அகர்வால் பொறுப்பேற்க இருப்பது உலகளவில் இந்தியருக்குப் பெருமையளிப்பதாக உள்ளது.

இதையும் படிங்க : ட்விட்டரின் புதிய சிஇஓ ஆகிறார் இந்தியர் பராக் அகர்வால்

ABOUT THE AUTHOR

...view details