தமிழ்நாடு

tamil nadu

'தீவிரவாதத்தை தோலுரித்துக் காட்டும் 'The Kerala Story': பிரதமர் மோடி பேச்சு!

By

Published : May 5, 2023, 5:41 PM IST

தீவிரவாதிகளின் சதித் திட்டங்களை தோலுரித்துக் காட்டும் வகையில், The Kerala Story படம் உருவாக்கப்பட்டுள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

pm modi
பிரதமர் மோடி

பெல்லாரி:கர்நாடக மாநிலத்தில் வரும் 10ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் தீவிரப் பரப்புரை செய்து வருகின்றன. பெல்லாரியில் இன்று (மே 5) நடைபெற்ற பாஜக பரப்புரைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

அப்போது அவர் உரையாற்றுகையில், "கர்நாடகாவை முதன்மை மாநிலமாக மாற்ற நாங்கள் தொலை நோக்கு திட்டம் வைத்துள்ளோம். ஆனால், காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் வெற்று வாக்குறுதிகள்தான் உள்ளன. நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்தே, காங்கிரஸ் ஊழலை மட்டுமே செய்துள்ளது. தேர்தலில் வெற்றி பெற பணத்தின் மூலம் தவறான கருத்துகளைப் பரப்புகிறது. பொதுமக்களை தவறாகவும் வழிநடத்துகிறது.

கர்நாடகா முதன்மை மாநிலமாகத் திகழ பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு அவசியமாகிறது. தீவிரவாதம் இல்லாத மாநிலம் உருவாக இவை அனைத்தும் அவசியம். தீவிரவாதத்துக்கு எதிராக பாஜக எப்போதும் கடுமையான நடவடிக்கை எடுக்கும். ஆனால், தீவிரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்போதெல்லாம், காங்கிரசுக்கு வயிற்றெரிச்சல் ஏற்படுகிறது.

வாக்கு வங்கிக்காக தீவிரவாதத்துக்கு காங்கிரஸ் அடிபணிந்து செல்வதைக் கண்டு வியப்பாக உள்ளது. இதுபோன்ற கட்சியால் கர்நாடகாவைப் பாதுகாக்க முடியுமா? காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவில் ஐடி நிறுவனங்கள், விவசாயம், தொழில்துறை, கலாசாரம் அனைத்தும் அழிக்கப்பட்டு விடும்.

'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் தீவிரவாதத்தின் சதித் திட்டத்தை பற்றி எடுத்துரைக்கிறது. தீவிரவாதத்தின் உண்மை மற்றும் அதன் கட்டமைப்பைக் கூறுகிறது. அதனால் தான், தீவிரவாதத்துக்கு துணை புரியும் காங்கிரஸ் இப்படத்தை எதிர்க்கிறது. வாக்கு வங்கிக்காக காங்கிரஸ் கட்சி தீவிரவாதத்துக்கு கேடயமாக செயல்படுகிறது.

எடியூரப்பா, பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி, மூன்றரை ஆண்டுகள் மட்டுமே சேவை செய்ய முடிந்தது. இங்கே காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது, வளர்ச்சிக்குப் பதிலாக ஊழலுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி ஆட்சிசெய்த போது, தனது அரசு டெல்லியில் இருந்து 100 பைசா அனுப்பினால், ஏழைகளுக்கு 15 பைசா மட்டுமே செல்கிறது என்று கூறினார். பொதுமக்களுக்கு அனுப்பிய தொகையில் 85 சதவீதத்தை காங்கிரஸ் கமிஷனாக எடுத்துக் கொண்டதாக அவரே ஒப்புக்கொண்டுள்ளார்" எனக் கூறினார்.

இதையும் படிங்க:Sharad Pawar: சரத் பாவர் ராஜினாமா ஏற்க மறுப்பு.. என்சிபி உயர்மட்ட குழுவில் தீர்மானம்!

இதையும் படிங்க:GT vs RR: குஜராத்துடன் மோதும் ராஜஸ்தான் - புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறுமா?

இதையும் படிங்க: நிலத்தகராறில் பயங்கரம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சுட்டுக்கொலை!

இதையும் படிங்க:'தீரன்' பட பாணியில் திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை தலைவன் கைது.. போலீசாருக்கு குவியும் வாழ்த்து!

ABOUT THE AUTHOR

...view details