தமிழ்நாடு

tamil nadu

தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல்! காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 30, 2023, 6:00 AM IST

தெலங்கானா சட்டமன்றத்திற்கு இன்று (நவ. 30) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.

Etv Bharat
Etv Bharat

ஐதராபாத் :119 தொகுதிகளை கொண்ட தெலங்கான சட்டமன்றத்திற்கு இன்று நவம்பர் 30ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க உள்ள நிலையில், வாக்குப்பதிவு மையங்களில் ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

தேர்தலில் ஆளும் முதலமைச்சர் கே. சந்திரசேகர ராவ் தலைமையிலான பிஆர்எஸ், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்த தேர்தலில் தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர ராவ், அவரது மகனும் அமைச்சருமான கே.டி ராமாராவ், பாஜக மக்களவை உறுப்பினர்களான பாண்டி சஞ்சய் குமார் மற்றும் டி அரவிந்த் உள்பட 2 ஆயிரத்து 290 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 221 பேர் 3-ம் பாலினத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சர் கேசிஆர் கஜ்வெல் மற்றும் காமரெட்டி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். கஜ்வெல் தொகுதியில் கேசிஆருக்கு எதிராக பாஜக எம்எல்ஏவான எட்டல ராஜேந்தர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பில் ரேவந்த் ரெட்டி கமரெட்டி தொகுதியில் கேசிஆரை எதிர்த்து போட்டியிடுகிறார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், கே.சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ். கட்சி 47.4 சதவீதம் வாக்குகள் பெற்று 119 இடங்களில் 88 தொகுதிகளை கைப்பற்றி அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்தது. காங்கிரஸ் வெறும் 19 இடங்களைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தது, அதே நேரத்தில் முந்தைய தேர்தலை காட்டிலும் பாஜகவின் வாக்கு சதவீதம் சற்று உயர்ந்தது.

இம்முறை மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க வேண்டும் என்று முனைப்பில் முதலமைச்சர் கே. சந்திரசேகர ராவ் திட்டமிட்டு உள்ள நிலையில், எப்படியாவது தெலங்கானாவில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என பாஜக, காங்கிரஸ் கங்கணம் கட்டி வருகிறது.

தெலங்கானாவில் மொத்தம் 3 கோடியே 17 லட்சத்து 32 ஆயிரத்து 727 வாக்காளர்கள் உள்ளனர். தெலங்கானா சட்டசபை தேர்தலுக்காக 2 லட்சத்து 50 ஆயிரம் ஊழியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு உள்ளதாகவும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகவும் மாநில தலைமை தேர்தல் அதிகாரி விகாஸ் ராஜ் தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க :தெலங்கனாவில் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! 144 தடை உத்தரவு அமல்!

ABOUT THE AUTHOR

...view details