தமிழ்நாடு

tamil nadu

மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு செயலிழந்துவிட்டது... டிபிஜிக்கு சம்மன்.. உச்ச நீதிமன்றம் அடுத்தடுத்து அதிரடி!

By

Published : Aug 1, 2023, 4:28 PM IST

மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் செயலிழந்து விட்டதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள், வன்முறை மற்றும் கலவரச் சம்பவங்கள் தொடர்பாக மாநில டிஜிபி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சம்மன் அனுப்பினர்.

Supreme Court
Supreme Court

டெல்லி : மணிப்பூர் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் செயலிழந்துவிட்டதாகவும், கலவரம் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக மணிப்பூர் மாநில டிஜிபி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உச்ச நிதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.

மணிப்பூர் கலவரம் தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசுகள், பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி பரிதிவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. அரசு தரப்பு வாதங்களை கேட்ட நிதிபதிகள், மாநிலத்தில் சட்டம் பொது மக்களை பாதுகாக்க தவறிவிட்டதாக கூறினர்.

மேலும் சட்டத்தால் மக்களை பாதுகாக்க முடியாவிட்டால் சாதாரண மக்களுக்கு என்னதான் மிஞ்சும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் வீடியோவில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்ட பழங்குடியின பெண்களை கலவரக்காரர்களிடம் ஒப்படைத்த போலீசார் மீது மாநில அரசு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

கலவரம் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடங்கிய மே மாதத்தில் இருந்து ஜூலை மாதம் வரையில் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு மற்றும் அரசியலமைப்பு இயந்திரம் முற்றிலும் செயலிழந்து விட்டதாக நீதிபதிகள் தெரிவித்தனர். வழக்கு தொடர்பாக ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர் துஷர் மேத்தா, மணிப்பூர் கலவரத்தில் பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் ரீதியிலான மற்றும் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பாக பதியப்பட்ட 11 முதல் தகவல் அறிக்கைகளை சிபிஐக்கு மாநில அரசுக்கு வழங்கியதன் ஆவணங்களை சமர்பித்தார்.

மேலும், கடந்த மே மாதம் 3ஆம் தேதி முதல் மணிப்பூர் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 6 ஆயிரம் வழக்குகளும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 11 முதல் தகவல் அறிக்கைகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு எதுவும் இல்லை என்றும், மாநில காவல்துறை விசாரணைக்கு தகுதியற்றவர்கள் என்பதும், சட்டம் ஒழுங்கை கண்காணிக்க தகுதியற்றவர்கள் என்பதும் தெளிவாக தெரிவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். சட்டத்தால் மக்களைப் பாதுகாக்க முடியவில்லை என்றால், அவை எதற்கு என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.

மேலும், மாநிலத்தில் நடந்த வன்முறைச் சம்பவங்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை குறித்து மணிப்பூர் டிஜிபி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். அடுத்த அமர்வின் போது நேரில் ஆஜராகும் மணிப்பூர் டிஜிபி, மணிப்பூர் வன்முறை சம்பவங்களுக்கு எதிராக காவல் துறை தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் நீதிபதிகளின் கேட்கும் கேள்விகளுக்கு நேரில் ஆஜராகி பதிலளிக்க வேண்டும் என சம்மன் அனுப்பி விசாரணையை ஒத்திவைத்தனர். வரும் திங்கட்கிழமை வழக்கின் மீதான அடுத்த கட்ட விசாரணை நடத்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க :டெல்லி சேவைகள் மசோதா... மக்களவையில் தாக்கல்!

ABOUT THE AUTHOR

...view details