தமிழ்நாடு

tamil nadu

மணிப்பூர் கலவரம்.. ஓய்வு பெற்ற நீதிபதிகள் குழு விசாரணை... உச்ச நீதிமன்றம் உத்தரவு!

By

Published : Aug 7, 2023, 4:51 PM IST

மணிப்பூர் கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த முன்னாள் ஜம்மு காஷ்மீர் தலைமை நீதிபதி தலைமையிலான 3 நீதிபதிகள் குழுவை நியமித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

Manipur
Manipur

டெல்லி : மணிப்பூர் வன்முறைச் சம்பவங்கள் குறித்து விசாரிக்க மூன்று ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையிலான குழு அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கலவரச் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு, நிவாரணம், மறுவாழ்வு உள்ளிட்ட மனிதாபிமான உதவிகள் குறித்து இந்த மூன்று நீதிபதிகள் குழு விசாரணை நடத்தும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

மணிப்பூர் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசுகள், பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி பரிதிவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி மனுக்களை விசாரித்த நீதிபதிகள், அடுத்த அமர்வில் மணிப்பூர் டிஜிபி உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி மாநிலத்தின் நிலவரம் குறித்து விளக்கம் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தனர். இந்நிலையில், மணிப்பூர் வன்முறை தொடர்பான வழக்குகள் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர். வெங்கடரமணி மற்றும் சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர் மத்திய மற்றும் மாநில அரசுகள் தரப்பில் ஆஜராகி, ஆகஸ்ட் 1ஆம்தேதி உச்ச நீதிமன்றம் கேட்ட மணிப்பூரில் போலீசாரால் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்த அறிக்கைகளை தாக்கல் செய்தனர்.

மேலும், மாநிலத்தில் நிலவும் வன்முறைச் சம்பவங்களை அரசு மிகவும் முதிர்ச்சியான நிலையில் கையாண்டு வருவதாக மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் ஆர். வெங்கடரமணி தெரிவித்தார். தொடர்ந்து மணிப்பூர் டிஜிபி ராஜீவ் சிங், ஆஜராகி மாநிலத்தில் நிலவிய வன்முறை சம்பவங்கள், இனக்கலவரம் மற்றும் நிர்வாகத்தால் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

வழக்கு குறித்து தெரிவித்த நீதிபதிகள், மணிப்பூரில் சட்டத்தின் மீதான நம்பிக்கையை மீட்டெடுப்பதே உச்ச நீதிமன்றத்தின் முயற்சி என்றனர். மேலும், மணிப்பூர் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் 3 பேர் தலைமையிலான குழுவை நியமித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஓய்வு பெற்ற ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற நீதிபதி கீதா மிட்டல் தலைமையில் முன்னாள் நீதிபதிகள் ஷாலினி பி ஜோசி, மற்றும் ஆஷா மேனன் ஆகியோர் அடங்கிய குழுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு நியமித்தது. மேலும் இந்த மூன்று ஓய்வு பெற்ற நீதிபதிகள் குழு கலவரத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு இழப்பீடு, நிவாரணம், மறுவாழ்வு குறித்து விசாரணை நடத்தும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதேபோல், மாநில அரசு தரப்பில் மாவட்டந்தோறும், எஸ்.பி தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு அமைத்து வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க :அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரம்.. உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details