தமிழ்நாடு

tamil nadu

மதுரை மாநகராட்சி அதிமுக கவுன்சிலர் வெற்றியை எதிர்த்த வழக்கு - உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

By

Published : Jul 28, 2023, 6:32 PM IST

மதுரை மாநகராட்சி தேர்தலில் 26ஆவது வார்டு கவுன்சிலராக அதிமுக வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்தும், மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிடக் கோரியும் சிபிஐ வேட்பாளர் முத்துசுமதி தொடர்ந்த வழக்கில், தமிழக தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

AIADMK
மதுரை

டெல்லி:தமிழ்நாட்டில் கடந்த 2022ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. மதுரை மாநகராட்சிக்கு கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில், மதுரை மாநகராட்சியின் 26ஆவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முத்துசுமதி என்பவரும், அதிமுகவைச் சேர்ந்த சொக்காயி என்பவரும் போட்டியிட்டனர். இதில், நான்கு ஓட்டுகள் வித்தியாசத்தில் சொக்காயி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி இருப்பதாகவும், மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்றும் முத்துசுமதி வலியுறுத்தினார். ஆனால், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. உதவி தேர்தல் அலுவலர் அமிர்தலிங்கம் தேர்தல் விதிகளை மீறியிருப்பதாக முத்துசுமதி குற்றம்சாட்டினார்.

இதைத் தொடர்ந்து முத்துசுமதி, வாக்கு எண்ணிக்கை மைய சிசிடிவி பதிவுகளை பாதுகாப்பாக வைக்கக் கோரியும், மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரியும் மதுரை மாவட்ட தேர்தல் தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, மதுரை உயர் நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

அதன் பின்னர், மதுரை மாநகராட்சியில் சொக்காயி கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து, முத்துசுமதி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு இன்று(ஜூலை 28) உச்ச நீதிமன்றத்தில், நீதிபதிகள் அனிருத் போஸ் மற்றும் நீதிபதி பேலா திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு வேட்பாளர் முத்துசுமதியிடம் வாக்கு விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை என்றும், 4 வாக்குகளே வித்தியாசம் இருந்ததால் முத்துசுமதி மறுவாக்கு எண்ணிக்கை கோரியபோதும் அவரது நியாயமான கோரிக்கையை அதிகாரிகள் நிறைவேற்றவில்லை என்றும் தெரிவித்தார். வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற அன்றே வாக்கு விவரங்கள் குறித்து முத்துசுமதி ஆட்சேபனை தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.

இருந்தபோதும், அதிகாரிகள் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி செய்து, விதிகளை மீறி சொக்காயி வெற்றி பெற்றதாக அறிவித்ததாகவும் வாதிட்டார். தவறு செய்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரினார். இதைப் பதிவு செய்த நீதிபதிகள், தமிழக தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: ரியஸ் எஸ்டேட் விவகாரம்: திமுக மோதல்; அதிமுக மாமன்ற உறுப்பினர் சங்கர் கடும் கண்டனம்!

ABOUT THE AUTHOR

...view details