தமிழ்நாடு

tamil nadu

விவசாயிகள் உயிரிழப்பில் தரவுகள் இல்லையா? ஆதாரங்களை காட்டி ராகுல் காந்தி கண்டனம்!

By

Published : Dec 3, 2021, 7:36 PM IST

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி போராடி உயிரிழந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க இயலாமல், தரவுகள் இல்லை என்று மத்திய அரசு பொய் கூறுகிறது எனக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.

Rahul Gandhi
Rahul Gandhi

டெல்லி : காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, டெல்லியில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று (டிச.3) மாலை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, “விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க இயலாமல், தரவுகள் இல்லை என மத்திய பாஜக அரசு கூறிவருகிறது” எனக் குற்றஞ்சாட்டினார்.

தரவுகள் இல்லையா?

தொடர்ந்து ராகுல் காந்தி பேசுகையில், “மத்திய அரசு பொய் சொல்கிறது, விவசாயச் சட்டங்களுக்கு எதிராக பல மாதங்களாக நடந்த போராட்டத்தில் உயிரிழந்த 700க்கும் மேற்பட்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க அவர்கள் தயாராக இல்லை. இந்த வாரம் நாடாளுமன்றத்தில் நான் எழுப்பிய கேள்விக்கு போராட்டத்தின் போது இறந்த விவசாயிகளின் எண்ணிக்கை குறித்த தரவு எதுவும் இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.

விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் பஞ்சாபில் இறந்த 403 விவசாயிகளுக்கு பஞ்சாப் அரசு நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்கியது. அதேபோல் பஞ்சாப் மாநிலத்துக்கு வெளியே 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இவர்களுக்கு மத்திய அரசு என்ன செய்யப்போகிறது. உங்களால் இவர்களுக்கு இழப்பீடு வழங்க முடியுமா?” என்றார்.

ரூ.5 லட்சம் இழப்பீடு

தொடர்ந்து விவசாய போராட்டங்களின்போது உயிரிழந்த விவசாயிகளின் பெயர் மற்றும் விவரங்கள் அடங்கிய பட்டியலையும் ராகுல் காந்தி காண்பித்தார். பின்னர் ராகுல் காந்தி கூறுகையில், பஞ்சாப்பில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகளின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

152 குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசோ பட்டியல் இல்லை என்கிறது. அந்த அரசிடம் திங்கள்கிழமை (டிச.6) பட்டியல் வழங்கப்படும். மேலும் இதில் உண்மை என்னவென்றால், பட்டியல் அரசாங்கத்திடம் ஏற்கனவே உள்ளது. ஆகையால்தான் பிரதமர் தனது தவறை ஒப்புக்கொண்டார். மன்னிப்பும் கேட்டார். இப்போது அவர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் என்ன சிக்கல்? மத்திய அரசின் செயல்பாடுகள் கோழைத்தனமானவை.

பஞ்சாப், தெலங்கானா நிவாரணம்

ஒரு பிரதமர் இவ்வாறு நடந்து கொள்ளக் கூடாது. விவசாய சட்டங்களை திரும்பப் பெறக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் போலீசாருடன் ஏற்பட்ட வன்முறை மோதலிலும், முற்றுகை போராட்டத்தின்போதும் பலர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி விவசாயத் தலைவர்களும் எதிர்க்கட்சிகளும் கைகோர்த்துள்ளன; கடந்த வாரம் விவசாயிகளின் தலைவர் ராகேஷ் திகைத் இந்தப் பிரச்சினையில் தீவிர கவனம் செலுத்தப்படும் என்று உறுதியளித்துள்ளார்” என்றார்.

பஞ்சாப் தவிர, தெலங்கானாவும் இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கியுள்ளது. கடந்த மாதம், முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ், உயிரிழந்த ஒவ்வொரு விவசாயி குடும்பத்துக்கும் ரூ.3 லட்சம் வழங்கப்படும் என்று கூறினார். மேலும் இதில் மத்திய அரசு கவனம் செலுத்தி ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார் என்பது நினைவு கூரத்தக்கது.

வேளாண் சட்டங்கள் வாபஸ்

விவசாயிகளின் கடும் எதிர்ப்புக்கு பணிந்த மத்திய அரசு, சர்ச்சைக்குள்ளான 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற்றது. இதனை பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு அறிவித்தார். இந்தச் சட்டங்கள் தற்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் திரும்ப பெறப்பட்டுள்ளன.

இந்நிலையில் விவசாய போராட்டங்களின்போது உயிரிழந்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் விவசாயிகள் போராட்டத்தை நினைவு கூரும் விதமாக நினைவுச் சின்னம் அமைக்க இடம் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது கவனிக்கத்தக்கது.

இதையும் படிங்க : Andhra Rains: ’காங்கிரஸ் தொண்டர்களே உதவுங்கள்’ - ராகுல் ட்வீட்

ABOUT THE AUTHOR

...view details