தமிழ்நாடு

tamil nadu

"புதுச்சேரி அரசு மக்களுக்கு எதிரான அரசு" - மாஜி முதலமைச்சர் நாராயணசாமி விமர்சனம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 1, 2023, 6:43 AM IST

புதுச்சேரி ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள் அனைவரும் மக்களுக்கு எதிரானவர்கள் என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான நாராயணசாமி விமர்சனம் செய்துள்ளார்.

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி

புதுச்சேரி:புதுச்சேரி மாநில முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைத்தியலிங்கம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய நாராயணசாமி, "கர்நாடக மாநில தேர்தலின் போது அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 500 ரூபாய் கேஸ் மானியம் வழங்கப்படும் என உள்ளிட்ட 5 அறிவிப்புகளை காங்கிரஸ் கட்சி அறிவித்தது.அப்போது காங்கிரஸ் கட்சி ஓட்டுக்காக அறிவித்துள்ளது என்றும், இது நாட்டின் பொருளாதாரத்தை வீணடிக்கும் என்றும் பிரதமர் விமர்சனம் செய்தார்.

இதுபோன்ற மானியத்தை கொடுத்து வாக்கு வாங்க காங்கிரஸ் கட்சி தந்திரம் செய்கிறது, இலவசங்களால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது என்று சொன்ன பிரதமர் நரேந்திர மோடி இன்று சிலிண்டருக்கு ரூ.200 குறைப்பு என அறிவித்துள்ளார். இது பிரதமர் தான் சொன்ன கருத்துக்கு மாறாக செயல்படுகிறார் என்பது தெளிவாக தெரிகிறது. தற்போது 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் வருகிறது. அந்த தேர்தலில் மக்களின் வாக்குகளை வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக தான் மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்" என்று புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஏற்கனவே ஒரு சிலிண்டரின் விலை 1150 ரூபாயாக உயர்ந்து விண்ணை எட்டியிருக்கிறது. தொடர்ந்து காங்கிரஸ் கட்சி சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தியும், மாநில காங்கிரஸ் அரசுகள் அதனை குறைத்தும் கூட, அதைனைப் பற்றி கவலைப்படாத பிரதமர், இந்த 5 மாநில தேர்தல் தோல்வி பயத்தினால் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்" என விமர்சித்து பேசினார்.

மேலும், "இதன் மூலம் பிரதமர் மோடியின் வேசம் கலைந்துள்ளது. தனிக்கை அறிக்கையில் மத்திய அரசின் 7 திட்டங்களில் ஏழரை லட்சம் கோடி ஊழல் நடந்திருப்பதாகக் கூறியுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் நடந்த 2ஜி பிரச்சனையை முன்வைத்து ஆட்சிக்கு வந்த மோடி, இதற்குப் பதில் அளிக்கவில்லை. மோடி அரசு ஊழல் மலிந்த அரசு என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது" என பேசினார்.

"புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலத்தை விடுவிக்க, காங்கிரஸ் கட்சித் தலைவர் வைத்திலிங்கம் எம்பி கையூட்டு பெற்றுள்ளார் என்று பகிரங்க குற்றச்சாட்டு கூறியுள்ளதாகவும், 2012ஆம் ஆண்டு ரங்கசாமி ஆட்சி காலத்திலேயே சட்டப்பேரவை கட்ட நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டது. பின்னர் அப்பணிகள் கைவிடப்பட்டதோடு, நீதிமன்ற உத்தரவின் பேரில் அந்நிலம் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இது நடைபெற்ற காலத்தில் வைத்திலிங்கம் மாநில அரசின் பொறுப்பில் இல்லை. எம்பியாக உள்ளார். சட்டப்பேரவை தலைவர் கூறிய குற்றச்சாட்டை ஆதாரத்துடன் நிரூபிக்காவிட்டால், தனது பதவியை ராஜினாமா செய்ய தயாரா? பல கட்சி மாறிய செல்வம் பாஜகவின் பொய் சொல்லும் கொள்கையை கடைபிடித்து வருகிறார்" என்று குற்றஞ்சாட்டினார்.

மேலும், "மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத ஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்காததால் சென்டாக் கவுன்சிலிங் (CENTAC counselling) தொடங்காமல் மாணவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். அதோடு அரசு செவிலியர் கல்லூரி தொடங்கவும் அனுமதி அளிக்கப்படவில்லை. இதன் மூலம் புதுச்சேரி ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள் புதுச்சேரி மக்களுக்கு எதிரானவர்கள் என்பது தெளிவாகியுள்ளது" என கடுமையாகச் சாடினார்.

ரங்கசாமி அறிவித்த சிலிண்டர் மானியம், குடும்பத் தலைவிக்கு 1000 ரூபாய், பிறந்த குழந்தைகள் பெயரில் 50 ஆயிரம் ரூபாய் ஆகிய 3 திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை. மத்திய அரசு சட்டப்பேரவை கட்ட நிதி ஒதுக்கவில்லை. நிதியே ஒதுக்காத போது கோவா சட்டப்பேரவையைப் பார்க்க சட்டமன்ற உறுப்பினர்கள் செல்வது எதற்காக.? அதனால் தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நிகழ்ச்சியைப் புறக்கணித்து புதுச்சேரி திரும்பி உள்ளனர்" என நாராயணசாமி தெரிவித்தார்.

இதையும் படிங்க: பஞ்சமி நில வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்!

ABOUT THE AUTHOR

...view details