தமிழ்நாடு

tamil nadu

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு சிவசேனா ஆதரவு - உத்தவ் தாக்கரே!

By

Published : Jul 12, 2022, 6:28 PM IST

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு சிவசேனா ஆதரவு அளிக்கும் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

Murmu
Murmu

மும்பை: குடியரசு தலைவர் தேர்தல் வரும் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் குடியரசு தலைவர் தேர்தல் தொடர்பாக, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் இல்லத்தில் சிவசேனா எம்பிக்கள் ஆலோசனை மேற்கொண்டனர். இதில், பாஜக கூட்டணி வேட்பாளரான திரெளபதி முர்முவுக்கே ஆதரவு தெரிவிக்க வேண்டும் என சிவசேனா எம்.பிக்கள் வலியுறுத்தியதாக தெரிகிறது.

திரெளபதி முர்மு பாஜக சார்பில் நிற்க வைக்கப்பட்டாலும், அவர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என சிவசேனா எம்.பி கஜானன் கீர்த்திகர் தெரிவித்துள்ளார். முர்முவை ஆதரித்தால் ஒட்டுமொத்த பழங்குடியின மக்களும் மகிழ்ச்சியடைவர் என்றும் தெரிவித்துள்ளார்.

திரெளபதி முர்முவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தும் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதியுள்ள அவர், முர்முவை ஆதரிப்பது பாஜகவை ஆதரிப்பது ஆகாது என தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா உடனும் சிவசேனா நல்லுறவை கொண்டுள்ளது, ஆனால் மக்களின் உணர்வுகளை கவனித்து முர்முவை ஆதரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

சிவசேனா எம்.பிக்கள் முர்முவை ஆதரிக்க வலியுறுத்தியுள்ளதால் உத்தவ் தாக்கரேவுக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எம்எல்ஏக்களை இழந்த நிலையில், எம்பிக்களை தக்க வைக்க முர்முவை ஆதரிக்க உத்தவ் தாக்கரே முடிவு செய்துள்ளார். அதன்படி, முர்முவுக்கு சிவசேனா ஆதரவு அளிக்கும் என உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

அதேநேரம், உத்தவ் தாக்கரேவின் மகா விகாஸ் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை ஆதரிக்கின்றன. இதனால் மகா விகாஸ் கூட்டணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பாஜகவின் தலையீட்டால் மகாராஷ்டிராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, உத்தவ் தாக்கரே முதலமைச்சர் பதவியை இழந்த நிலையில், குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக ஆதரவு நிலைப்பாட்டை தாக்கரே எடுத்துள்ளார்.

இதையும் படிங்க: சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கக் கோரும் வழக்கு - விசாரணை ஒத்திவைப்பு!

ABOUT THE AUTHOR

...view details