தமிழ்நாடு

tamil nadu

பிரதமர் மோடி முதலில் கோவிட்-19 தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் - தயாநிதி

By

Published : Feb 11, 2021, 9:23 AM IST

நாட்டு மக்களுக்கு நம்பிக்கை தரும்விதமாக பிரதமர் நரேந்திர மோடி கோவிட்-19 தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் வலியுறுத்தியுள்ளார்.

தயாநிதி மாறன்
தயாநிதி மாறன்

மக்களவையில் 2021-22ஆம் ஆண்டு மத்திய நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் தயாநிதி மாறன் உரையாற்றினார். அப்போது அவர் தனது உரையில் திருக்குறளை மேற்கோள்காட்டி தொடங்கினார்.

தயாநிதி மாறன் மேற்கோள் காட்டிய குறள்

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீர்அன்றே

செல்வத்தைத் தேய்க்கும் படை . ( குறள் எண் 555)

பொருள்:

தவறான ஆட்சியால் துன்பப்பட்டு, துன்பம் பொறுக்காத குடிமக்கள் சிந்திய கண்ணீர்தான், ஆட்சியாளரின் செல்வத்தை அழிக்கும் ஆயுதம்.

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் திமுக நிறுவனருமான அண்ணாவை மேற்கோள்காட்டிய தயாநிதி மாறன், செல்வந்தர்களுக்கு வரிவிதித்து ஏழைகளுக்கு சலுகை வழங்கவேண்டும் என அண்ணா கூறியதற்கு நேர்மாறாக செல்வந்தர்களுக்குச் சலுகை வழங்கி ஏழைகளுக்கு வரி விதிக்கும்விதமாக மத்திய அரசு தனது பட்ஜெட் திட்டங்களை அறிவித்துள்ளது எனக் குற்றஞ்சாட்டினார்.

தயாநிதி மாறன் பேச்சு

கோவிட்-19 தடுப்பூசி குறித்து பேசுகையில், "நாட்டு மக்களுக்கு தடுப்பூசி தொடர்பான ஐயப்பாடுகள் தொடர்ந்துள்ளன. அமெரிக்காவில் அதிபர் ஜோ பைடன், கமலா ஹாரிஸ் ஆகியோர் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

பிரிட்டனில் எலிசபத் ராணி தடுப்பூசி செலுத்திக்கொண்டார். அதேபோல் பிரதமர் நரேந்திர மோடியின் சிறந்த நண்பர் பெஞ்சமின் நெதன்யாகு தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

அதேபோல் பிரதமர் நரேந்திர மோடியும் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டு நம்பிக்கை அளிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் துரிதமாக நடைபெறும்" என்றார்.

இதையும் படிங்க:65 லட்சம் பேருக்கு தடுப்பூசி; 97% பேருக்கு முழு திருப்தி-மத்திய சுகாதாரத் துறை அமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details