தமிழ்நாடு

tamil nadu

தெருவிலிருந்து பத்மஸ்ரீ வரை - ரணங்களை வெற்றியாக்கிய சாதனை திருநங்கை மஞ்சம்மா ஜோகதி

By

Published : Nov 10, 2021, 3:09 PM IST

சாலை ஓரங்களில் பிச்சை எடுத்தது முதல் பத்மஸ்ரீ விருது பெறும் வரை மஞ்சம்மா ஜோகதி சந்தித்த துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. பட்ட துன்பங்கள் அனைத்தையும் காலுக்கு அடியில் இட்டு, அவைகளை வெற்றி படிக்கற்களாக மாற்றி முன்னேறி இந்த இடத்தை அடைந்துள்ளார்.

Padmashri Manjamma Jogati, Transgender Folk Artist life Journey, திருநங்கை மஞ்சம்மா ஜோகதி, மஞ்சம்மா ஜோகதி, பத்மஸ்ரீ மஞ்சம்மா ஜோகதி, பத்மஸ்ரீ மஞ்சம்மா
திருநங்கை மஞ்சம்மா ஜோகதி

பெங்களூரு:கர்நாடக ஜனபதா அகாடமியின் முதல் திருநங்கை தலைவரான மஞ்சம்மா ஜோகதிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்மஸ்ரீ விருதை வழங்கினார்.

யார் இந்த மஞ்சம்மா

கர்நாடக மாநிலத்தின் நாட்டுப்புறக் கலைகளுக்கு தலைமையிடமான ஜனபடா அகாடமியின் தலைவராக மஞ்சம்மா ஜோகதி இருந்து வருகிறார். 60 வயதான மஞ்சம்மாவின் இயற்பெயர் மஞ்சுநாத் ஷெட்டி.

தன்னுடைய பதின்பருவத்தில் தான் ஒரு பெண் என்பதை உணர்ந்த மஞ்சுநாத் ஷெட்டி அதை தனது குடும்பத்தாரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து, மஞ்சுநாத் ஷெட்டியை அவரின் குடும்பத்தார், ஹொசபேட்டை அருகே இருக்கும் ஹூலிஹே அம்மா கோயிலுக்கு அழைத்துச் சென்று மூன்றாம் பாலினத்தவராக அறிவித்து, கடவுள் ரேணுகா எல்லம்மாவுக்கு சேவை செய்ய அர்ப்பணித்தனர். மூன்றாம்பாலினத்தைச் சேர்ந்தவர்கள், எல்லம்மாவை திருமணம் செய்வதாக நம்பப்படுகிறது.

ஃபீனிக்ஸ் பறவை

அதன்பின் மஞ்சம்மா இளமைக் காலத்தில் வறுமை, சமூகப் புறக்கணிப்பு, பாலியல் சீண்டல்கள், துன்புறுத்தல் என பலக் கொடுமைகளை எதிர்கொண்டு ஃபீனிக்ஸ் பறவை போல மேலெழும்பி முன்னேறி நாட்டுப்புறக் கலைகளைக் கற்றார்.

கிராமியக் கலைகளில் சிறப்பாகத் தேறிய மஞ்சம்மாவுக்கு கடந்த 2006ஆம் ஆண்டு கர்நாடக ஜனபதா அகாடமி விருது வழங்கியது. தனக்கு விருது வழங்கிய அகாடமிக்கே அடுத்த 13 ஆண்டுகளில் மஞ்சம்மா தலைவராக நியமிக்கப்பட்டார். 2010ஆம் ஆண்டு மஞ்சம்மாவுக்கு கன்னட ராஜ்யோத்ஷவா விருது வழங்கி கர்நாடக அரசு கவுரவித்தது.

பத்மஸ்ரீ இருந்தும் உறங்க வீடில்லை

மஞ்சம்மா ஜோகதி, இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றார். ஆனால், அவருக்கு தங்குவதற்கு இன்னும் சரியான வீடு இல்லை என்பது சோகமான செய்தி. அரசாங்கத்தின் மானிய வீட்டுத் திட்டத்தின் கீழ் நிதியைப் பெற முயற்சித்து வருகிறார், மஞ்சம்மா. அரசாங்கத்திடம் இருந்து எந்தப் பதிலும் கிடைக்காததால், மஞ்சம்மா தற்போது இணையவழியில் நிதித்திரட்டி வருகிறார்.

மஞ்சம்மா மாரியம்மனஹள்ளியில் ஒரு மாடி வீட்டைக் கட்ட திட்டமிட்டுள்ளார். அங்கு அவர் தனது மாணவர்களுக்கு கிராமியக் கலைகளை கற்றுத்தர தீர்மானித்துள்ளார்.

பத்மஸ்ரீ மஞ்சம்மா ஜோகதி குடியரசு தலைவரிடம் விருது பெற்றபோது

சொந்தக் குடும்பத்தில் இருந்து ஒதுக்கப்பட்டதிலிருந்து, நாட்டுப்புறக் கலைஞர்களின் சமூகத்தில் ஒரு நட்சத்திரமாக மாறும் வரை, மஞ்சம்மாவின் கதை அளவிட முடியாத வலியைக் கொண்டது.

ஆனால், அது நம்பிக்கையும், வெற்றியும் கொண்டது. வீட்டைக் கட்டும் பணியை முடிக்க அதிக நிதி திரட்ட உதவும் மனங்கள் தயங்காமல் நிதியளித்து, ஒடுக்கப்பட்ட ஒரு பாலினத்திற்கான மேன்மைக்கு வித்திடலாம் என்பதே இந்த செய்தியின் உண்மையான தன்மை.

இதையும் படிங்க:ஆதாரவற்றவர்களின் வாரிசு: பத்ம‌ஶ்ரீ மூலம் அயோத்திக்கு பெருமை சேர்த்த ஷெரீப் சாச்சா!

ABOUT THE AUTHOR

...view details