தமிழ்நாடு

tamil nadu

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மணிப்பூர் செல்ல திட்டம் - ஜூலை 29, 30 தேதிகளில் பயணம்!

By

Published : Jul 27, 2023, 3:46 PM IST

வன்முறைச் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்திற்கு வரும் ஜூலை 29 மற்றும் 30ஆகிய தேதிகளில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

opposition alliance
opposition alliance

டெல்லி : கலவரம் மிகுந்த மணிப்பூர் மாநிலத்தை வரும் ஜூலை 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில், எதிர்க்கட்சிகளின் இந்திய தேசிய வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த கூட்டணியின் எம்.பி.க்கள் பார்வையிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் முதல் கலவரம் வெடித்து வருகிறது. பொருளாதாரத்தில் முன்னேறிய மெய்தி இன மக்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்கக் கூடாது என வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அதில் இருந்து கடந்த மூன்று மாதங்களாக மணிப்பூர் மாநிலத்தில் கலவரச் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.

இந்த கலவரச் சம்பவங்களில் சிக்கி 170க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து, பாதுகாப்புதேடி முகாம்களில் வசித்து வருகின்றனர். ஏறத்தாழ 3 மாதங்களாக நீடித்து வரும் கலவரத்தைக் கட்டுப்படுத்த மாநில அரசு போராடி வருகிறது.

கடந்த மே மாதம் பழங்குடியினப் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு சாலையில் இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பெண்கள் மீதான வன்கொடுமைகளுக்குப் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதனிடையே கடந்த ஜூலை 20ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், மணிப்பூர் விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. மணிப்பூர் வன்முறை மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமைகள் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன.

இருப்பினும் மணிப்பூர் விவகாரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் கொடுப்பார் எனத் தெரிவிக்கப்பட்டது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் விவாதிக்கத் தயார் என நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். இதை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டுமென தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்திற்கு வரும் ஜூலை 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் எதிர்க்கட்சிகளின் இந்திய தேசிய வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த கூட்டணியின்(I.N.D.I.A) எம்.பி.க்கள் செல்ல உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அண்மைக்காலமாக நடந்த இன வெறித் தாக்குதல்களில் பாதிப்படைந்த மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மணிப்பூர் செல்ல உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தப் பயணத்தின்போது நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ள பழங்குடியின மக்களை சந்திக்க உள்ளதாகவும், அவர்களது பிரதிநிதிகளை சந்தித்து மாநிலத்தின் தற்போதைய நிலை குறித்து எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் விவாதிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தப் பயணத்தின் இடையே மணிப்பூர் ஆளுநர் அனுசுயா உய்கேவை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சந்திக்க உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க :சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள கல்லறைகளை இடமாற்றம் செய்யும் விவகாரம் - தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறுவது என்ன?

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details