தமிழ்நாடு

tamil nadu

நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டங்கள் நடத்த தடை - எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு!

By

Published : Jul 15, 2022, 3:27 PM IST

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 18ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

rules
rules

டெல்லி:நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 18ஆம் தேதி தொடங்குகிறது. இதில் விலைவாசி உயர்வு, உக்ரைன் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதையொட்டி மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளின் பட்டியலை மக்களவைச் செயலகம் வெளியிட்டது. அதில், ஊழல், கோழை, சர்வாதிகாரி, வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், கரோனா பரப்புபவர், வாய்ஜாலம் காட்டுபவர் உள்ளிட்ட பல்வேறு வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

நாடாளுமன்ற அவைகளில் இந்த வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டால், அவை அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. ஆனால், பட்டியலில் உள்ள வார்த்தைகள் அனைத்தும் நீக்கப்பட்டிருக்கிறதே தவிர, தடை செய்யப்படவில்லை என்றும், இந்த நீக்கம் என்பது வழக்கமான ஒரு நடைமுறைதான் என்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா விளக்கமளித்தார்.

இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டங்கள் நடத்த தடை விதிக்கப்படுவதாக, எம்.பி.க்களுக்கு மாநிலங்களவை செயலாளர் பி.சி.மோடி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம், தர்ணா, உண்ணாவிரதம் அல்லது மதம் சார்ந்த எந்தவித நிகழ்ச்சிகளையும் நடத்த தடை விதிக்கப்படுவதாகவும், இதற்கு எம்.பிக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது ஜனநாயகத்திற்கு எதிரானது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கடந்த காலங்களில் நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், அதை ஒடுக்கும் வகையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

இதையும் படிங்க:பட்ஜெட் கூட்டத்தொடர் : ஆரோக்கியமாகவும் சுமூகமாகவும் நடைபெறும் - சபாநாயகர் நம்பிக்கை!

ABOUT THE AUTHOR

...view details