தமிழ்நாடு

tamil nadu

கேரளாவில் ரூ.25 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்!

By

Published : May 14, 2023, 9:39 AM IST

கேரளாவில், ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.25 ஆயிரம் கோடி மதிப்புள்ள 2,800 கிலோ போதப்பொருளை இந்திய கடற்படை உடன் இணைந்து தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Narcotics Control Bureau seizing 2800 kg of drugs worth Rs 25000 crore and arrested a Pakistani
ரூ.25 ஆயிரம் கோடி மதிப்புள்ள 2,800 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

ரூ.25 ஆயிரம் கோடி மதிப்புள்ள 2,800 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

கொச்சி: இந்திய கடற்பகுதியில் போதைப்பொருள் கடத்தப்படுவதை தடுப்பதற்காக தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு (Narcotics Control Bureau) ஆப்ரேஷன் சமுத்திரகுப்த் (operation samudragupt) என்ற சிறப்பு நடவடிக்கையில் தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு துணை இயக்குனர் சஞ்சய் குமார் சிங் தலைமையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.

இந்த ஆப்ரேஷன் இந்திய கடல் பகுதியில் கப்பல் மூலமாக கடத்தப்படும் போதைப் பொருட்களை சோதனை செய்து பரிந்துரை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. தங்களுக்கு கிடைத்த தகவல்களை குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவு, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு, கடற்படை உளவுப் பிரிவு ஆகியவை இணைந்து செயல்பட்டு பல்வேறு போதைப்பொருள் கடத்தலை தடுத்துள்ளது. மேலும் தொழில்நுட்ப ரீதியாகவும் பல்வேறு தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சோதனையின் முதற்கட்டமாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 529 கிலோ ஹாஷிஸ், 221 கிலோ மெத்தம்பெட்டமைன், 13 கிலோ ஹெராயின் ஆகிய போதைப் பொருட்கள் பலுசிஸ்தான் (balochistan) மற்றும் ஆப்கானிஸ்தான் பகுதியிலிருந்து குஜராத் கடற்பகுதி வழியாக கடத்த முயன்ற போது பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், தொடர் கண்காணிப்பு நடவடிக்கையால் ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தப்பட்ட 200 கிலோ ஹெராயின் போதைப் பொருளை கேரள கடற்கரை பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பறிமுதல் செய்தனர். மேலும் ஆறு இராணிய போதைப் பொருள் கடத்தல் காரர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆப்ரேஷன் சமுத்திரகுப்த் இலங்கை மற்றும் மாலத்தீவு உடன் இணைந்து சோதனையில் ஈடுபட்டு, நடத்தப்பட்ட இரண்டு ஆப்ரேஷன் மூலமாக கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 2, 286 கிலோ ஹெராயின் மற்றும் 128 கிலோ மெத்தம்பெட்டமைன் மற்றும் 19 போதைப்பொருள் கடத்தல் காரர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மாலத்தீவு காவல்துறையினரால் 4 கிலோ ஹெராயின் மற்றும் ஐந்து போதைப்பொருள் கடத்தல் காரர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், மக்கான் (Makkan) கடற்பகுதியில் மிகப்பெரிய மதர்ஷிப், அதிகளவு போதைப்பொருளை தான் செல்லும் இந்திய கடற்பகுதி வழியாக பல்வேறு சிறு சிறு கப்பல்களில் போதைப் பொருளை கடத்தி வருவது தொடர்பாக தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு மற்றும் கடற்படை உளவு பிரிவு இணைந்து கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, 134 மிகப்பெரிய மூட்டைகளில் போதைப்பொருள் கடத்தப்படுவதை கண்டுபிடித்து அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்தனர். மேலும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவரையும் கைது செய்தனர். மதர்ஷிப் கொச்சின் கடற்கரை பகுதிக்கு கொண்டுவரப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து கப்பலில் இருந்து எடுக்கப்பட்ட போதைப் பொருளை கணக்கிடும் பணி நடைபெற்றது. இதுவரை கிடைத்த தகவலின் அடிப்படையில் 2,800 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் இதன் சர்வதேச மதிப்பு ரூ.25 ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும் என தெரியவந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தப்பட்ட போதை பொருள் எந்தெந்த நாட்டிற்கு கொண்டு செல்லப்பட இருந்தது. இதில் தொடர்புடையவர்கள் யார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: ரூ.12 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப்பொருள்கள் பறிமுதல் - அரபிக் கடலில் கடத்தல்!

ABOUT THE AUTHOR

...view details