தமிழ்நாடு

tamil nadu

2019-ல் பாஜகவுக்கு தாவிய எம்எல்ஏக்கள் மீண்டும் பாஜக சார்பில் போட்டி - 2023ல் பாஜகவின் திட்டம் பலிக்குமா?

By

Published : May 13, 2023, 11:37 AM IST

கர்நாடகாவில் கடந்த 2018 தேர்தலில் காங்கிரசிலிருந்து விலகி பாஜக ஆட்சியமைக்க காரணமான எம்எல்ஏக்கள், இந்த முறையும் பாஜக சார்பில் போட்டியிடுகின்றனர். இந்த முறையும் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்புள்ளதாக கருத்துக் கணிப்புகள் கூறும் நிலையில், இம்முறையும் கட்சித் தாவல்கள் இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Migrant
எம்எல்ஏ

கர்நாடகா:கர்நாடக சட்டப்பேரவைக்கு கடந்த 10ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்ற நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று(மே.13) நடைபெற்று வருகிறது. காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதிக தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. ஆனால், கடந்த 2018 தேர்தலைப் போலவே, இந்த முறையும் கர்நாடகாவில் தொங்கு சட்டசபை அமையும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

கடந்த முறை குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைத்த நிலையில், 13 மாதங்களிலேயே ஆட்சி கலைக்கப்பட்டது. இந்த கூட்டணியில் இருந்த 17 எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி பாஜக ஆட்சியை கைப்பற்றியது. அப்போது, காங்கிரஸ் கூட்டணியிலிருந்து பாஜகவுக்கு சென்ற எம்எல்ஏக்கள், இந்த முறை பாஜக சார்பில் போட்டியிட்டுள்ளனர். அவர்களின் விபரங்களைக் காண்போம்...

ரமேஷ் ஜார்கிஹோலி

ரமேஷ் ஜார்கிஹோலி கடந்த 1999ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு ஐந்து முறை வெற்றி பெற்றார். கடந்த 2019ஆம் ஆண்டு, காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கூட்டணி அரசுக்கு எதிராக கிளர்ச்சியை ஏற்படுத்தியதில் முக்கியமானவர். பின்னர் 2019-ல் நடந்த இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் இவர் மீண்டும் கோகாக் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டார்.

எம்டிபி நாகராஜ்

இவர் கடந்த 2013 மற்றும் 2018 பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் சார்பில் போடியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் காங்கிரசை விட்டு வெளியேறி பாஜகவில் சேர்ந்தார். ஆனால், 2019 இடைத்தேர்தலில் தோல்வியடைந்தார். 2018 தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த சரத் பச்சேகவுடா, பாஜகவுக்கு எதிராக கிளர்ச்சி செய்து, இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இம்முறையும் ஹோசகோட் தொகுதியில் நாகராஜை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில் சரத் பச்சேகவுடா போட்டியிட்டார்.

கே.சுதாகர்

சுதாகர், கடந்த 2013 மற்றும் 2018 பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் சார்பில் போடியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் பாஜகவில் இணைந்து இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இடைத்தேர்தலில் இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அஞ்சனப்பா தோல்வியடைந்தார். இம்முறை சிக்கபல்லாபுரா தொகுதியில், சுதாகர் பாஜக சார்பில் போட்டியிட்டார்.

பி.சி.பாட்டீல்

2018-ல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு பி.சி.பாட்டீல் வெற்றி பெற்றார். 2019 இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார். கடந்த 2018-ல் பாஜக சார்பில் போட்டியிட்ட யுபி.பனாகர், பாஜகவிலிருந்து விலகி காங்கிரசில் இணைந்தார். தற்போதைய தேர்தலில், ஹிரேகரூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட பி.சி.பாட்டீலை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் யுபி.பனாகர் போட்டியிட்டார். இவர்கள் இருவருக்கும் பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது.

சிவராம் ஹெப்பர்

சிவராம் ஹெப்பர், கடந்த 2013 மற்றும் 2018 பேரவை தேர்தலில், காங்கிரசிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், அவர் பாஜகவில் சேர்ந்து 2019 இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். 2013 மற்றும் 2018 ஆகிய இரண்டு தேர்தல்களிலும் பாஜக சார்பில் போட்டியிட்ட விஎஸ் பாட்டீல் தோல்வியடைந்தார். தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் யல்லாபுரா தொகுதியில், பாஜகவின் சிவராம் ஹெப்பரை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில் விஎஸ் பாட்டீல் போட்டியிட்டார்.

எஸ்.டி.சோமசேகர்

எஸ்.டி.சோமசேகரும், 2013, 2018 ஆகிய இரு பேரவை தேர்தல்களில், காங்கிரசிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019 இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த இரு முறையும் ஜேடிஎஸ் சார்பில் போட்டியிட்ட டிஎன் ஜவராய் கவுடா தோல்வியடைந்தார். தற்போதைய தேர்தலிலும் யஷ்வந்த்புரா தொகுதியில் எஸ்.டி.சோமசேகரை எதிர்த்து ஜவராய் கவுடாவை ஜேடிஎஸ் நிறுத்தியுள்ளது. மறுபுறம் காங்கிரஸ் சார்பில் பாலராஜ் கவுடா போட்டியிட்டார்.

பைரதி பசவராஜ்

கடந்த 2013 மற்றும் 2018 பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் சார்பில் போடியிட்டு வெற்றி பெற்ற பைரதி பசவராஜ், பாஜகவுக்கு தாவி 2019 இடைத்தேர்தலிலும் வென்றார். அப்போது காங்கிரஸ் வேட்பாளர் எம்.நாராயண சுவாமி தோல்வியடைந்தார். 2023 தேர்தலில், கேஆர் புரம் தொகுதியில் பாஜக சார்பில் பைரதி பசவராஜ் போட்டியிட்டார். காங்கிரஸ் சார்பில் டி.கே.மோகன் போட்டியிட்டுள்ளார்.

ஆனந்த் சிங்

ஆனந்த் சிங் கடந்த 2013 தேர்தலில் விஜயநகரம் தொகுதியில் பாஜக சார்பிலும், 2018 தேர்தலில் காங்கிரஸ் சார்பிலும் போட்டியிட்டு வென்றார். அதன் பிறகு மீண்டும் பாஜகவில் இணைந்து, 2019 இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். அதன் பிறகு ஆனந்த் சிங் பாஜகவிலிருந்து விலகியதால், 2023 தேர்தலில் அவரது மகன் சித்தார்த் சிங் களமிறங்கியுள்ளார். காங்கிரஸ் சார்பில் எச்.ஆர்.கவியப்பா போட்டியிட்டார்.

என்.முனிரத்னா

முனிரத்னா 2013 மற்றும் 2018-ல் ஆர்ஆர். நகர் தொகுதியில் காங்கிரசிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், இடைத்தேர்தலில் பாஜக சார்பில் வெற்றி பெற்றார். இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட குசுமா ஹனுமந்தராயப்பா தோல்வியடைந்தார். 2023 தேர்தலிலும், குசுமாவும், முனிரத்னாவும் போட்டியிட்டுள்ளனர்.

ஸ்ரீமந்த் பாட்டீல்

ஸ்ரீமந்த் பாட்டீல் கடந்த 2018 தேர்தலில் ககாவாட் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பிறகு பாஜகவில் இணைந்து 2019 இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். 2018 தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட பாஜக வேட்பாளர் ராஜு காகே இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்த முறையும், காங்கிரஸ் சார்பில் ராஜு காகேவும், பாஜக சார்பில் ஸ்ரீமந்த் பாட்டீலும் போட்டியிட்டனர்.

மகேஷ் குமட்டள்ளி

மகேஷ் குமட்டள்ளி கடந்த 2018ல் அத்தாணி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் தேர்வு செய்யப்பட்டார். பின்னர், பாஜகவில் இணைந்து 2019 இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். 2018 தேர்தலில் தோல்வியடைந்த பாஜக வேட்பாளர் லஷ்மண் சாவடிக்கு 2023 தேர்தலில் பாஜக சீட் கொடுக்காததால், காங்கிரசில் இணைந்தார். இந்த முறை காங்கிரஸ் சார்பில் லஷ்மண் சாவடியும், பாஜக சார்பில் மகேஷ் குமட்டள்ளியும் போட்டியிட்டனர்.

கே.கோபாலைய்யா

கே.கோபாலைய்யா மகாலட்சுமி லேஅவுட் தொகுதியில், 2013 மற்றும் 2018-ல் ஜேடிஎஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் பாஜகவில் இணைந்து 2019 இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். 2023 தேர்தலில் பாஜக சார்பில் கோபாலைய்யாவும், காங்கிரஸ் சார்பில் கேசவமூர்த்தி மற்றும் ஜேடிஎஸ் சார்பில் கே.சி.ராஜண்ணா ஆகியோர் போட்டியிட்டனர்.

கே.சி.நாராயண கவுடா

கே.சி.நாராயண கவுடா, கடந்த 2013 மற்றும் 2018 தேர்தல்களில் ஜேடிஎஸ் சார்பில் கே.ஆர்.பேட்டை தொகுதியில் போட்டியிட்டு இரண்டு முறை வெற்றி பெற்றார். பின்னர் பாஜகவில் இணைந்து, 2019 இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். இவர் மூலம் மாண்டியா மாவட்டத்தில் முதல்முறையாக பாஜக வெற்றி பெற்றது. இடைத்தேர்தலில் ஜேடிஎஸ் சார்பில் போட்டியிட்ட பி.எல்.தேவராஜா தோல்வியடைந்தார். இம்முறை நாராயண கவுடாவை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் பி.எல்.தேவராஜாவும், ஜேடிஎஸ் சார்பில் ஹெச்.டி.மஞ்சுவும் போட்டியிட்டனர்.

பிரதாப் கவுடா பாட்டீல்

பிரதாப் கவுடா பாட்டீல் மஸ்கி தொகுதியில் 2018-ல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் பாஜகவில் இணைந்து 2019 இடைத்தேர்தலில் தோல்வியடைந்தார். இடைத்தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் பசனகவுடா வெற்றி பெற்றார். பாஜகவிலிருந்த பசனகவுடா காங்கிரசில் சேர்ந்து இடைத்தேர்தலில் பாட்டீலை தோற்கடித்தார். 2023 தேர்தலில் பாஜக மீண்டும் பிரதாப் கவுடாவை களமிறக்கியது. காங்கிரஸ் சார்பில் பசனகவுடா போட்டியிட்டார்.

இதையும் படிங்க: Karnataka Election Results: கர்நாடக தேர்தல் முடிவுகள்: 9 மணி நிலவரம்

ABOUT THE AUTHOR

...view details