தமிழ்நாடு

tamil nadu

2023ஆம் ஆண்டில் அமலாகும் புதிய விதிகள்: கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

By

Published : Dec 31, 2022, 11:08 PM IST

புத்தாண்டு தொடங்கும் அதேநேரத்தில் நடுத்தர மக்களின் வயிற்றில் புளியை கரைக்கும் வகையில் பல்வேறு விதிகளும் அமலாகின்றன. அதுகுறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்...

விதிகள்
விதிகள்

டெல்லி:பல்வேறு இன்ப, துன்பங்கள் மற்றும் சவுகரிய, அசவுகரிய நினைவுகளுடன் 2022ஆம் ஆண்டு இனிதே நிறைவு பெற்றது. அடுத்த 365 நாட்களை கடந்து செல்ல முதல் படிக்கெட்டில் மக்கள் காலடி எடுத்து வைத்துள்ளோம். கடந்த வருடம் பல்வேறு பொருளாதார சிக்கல்கள் மற்றும் இன்னல்களை கொடுத்திருந்தாலும், புது வருடத்தின் மீதான ஈர்ப்பு அனைத்து தரப்பு மக்களிடமும் அளவு கடந்து காணப்படுகிறது.

அதேநேரம் அறுசுவை உணவில் கசப்பும் ஒரு பங்கு வகிப்பதைப் போல் நடப்பாண்டில் பல்வேறு புதிய விதிகளும் அமலாகின்றன. வங்கி லாக்கர் விதி, கேஸ் சிலிண்டர் விலை உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் குறித்த தகவல்களை காண்போம்...

எல்.பி.ஜி. சிலிண்டர் விலையில் மாற்றம்:ஒவ்வொரு மாதமும் முதல் தேதி எரிவாயு நிறுவனங்கள் கேஸ் சிலிண்டர்களின் விலையை நிர்ணயம் செய்கின்றன. 2023ம் ஆண்டு புத்தாண்டில் கேஸ் சிலிண்டர் விலை குறித்து முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக கச்சா எண்ணெய் விலையில் சரிவு காணப்படுவதால், புத்தாண்டில் விலை மாற்றங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றன.

ஒரு புதிய காரை வாங்கலாமா... வேண்டாமா..?2023 ஆண்டு புதிய கார் வாங்க திட்டமிட்டால், அதற்காக அதிக நிதிச் சுமைகளை சமாளிக்க வேண்டியது ஏற்படும் எனக் கூறப்படுஇகிறது. புத்தாண்டு தொடக்கத்தில் இருந்து, மாருதி சுசுகி, எம்.ஜி மோட்டார்ஸ், ஹூண்டாய், முதல் ஆடி மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் போன்ற நிறுவனங்கள் தங்கள் வாகனங்களின் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளன. டாடா தனது வர்த்தக வாகனங்களின் விலையை ஜனவரி 2 முதல் உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.

எச்.டி.எஃப்.சி. கிரெடிட் கார்டு விதிகளில் மாற்றம்:தனியார் வங்கியான எச்.டி.எஃப்.சி.யும் 2023ஆம் ஆண்டு முதல் தனது கிரெடிட் கார்டு விதிகளை மாற்ற உள்ளதாக அறிவித்துள்ளது. எச்.டி.எஃப்.சி வங்கியின் கிரெடிட் கார்டு பயனர்கள், தங்கள் பில் தொகையை செலுத்தும் போது வழங்கப்படும் ரிவார்டு பாயின்ட் விதிகள் மாற உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி இன்வாய்சிங் வரம்பு ஐந்து கோடி:ஜிஎஸ்டி மின் விலைப்பட்டியல் அல்லது எலக்ட்ரானிக் பில் விதிகள் ஜனவரி 1 முதல் மாறு உள்ளன. இ-இன்வாய்ஸ் செய்வதற்கான உச்ச வரம்பை 20 கோடி ரூபாயில் இருந்து 5 கோடி ரூபாயாக அரசு குறைத்துள்ளது. இந்த விதி ஜனவரி 1 முதல் அமலுக்கு வருவதால், ஆண்டுக்கு ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் செய்யும் வணிகர்கள் மின்னணு பில்களை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என கருதப்படுகிறது.

வங்கிகளின் தன்னிச்சை போக்கு கட்டுப்படுத்தப்படும்:இந்திய ரிசர்வ் வங்கி 2023 ஆண்டு முதல் பல்வேறு புதிய வழிகாட்டுதல்களை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, வங்கி லாக்கரின் புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. லாக்கரில் வைக்கப்பட்டுள்ள வாடிக்கையாளரின் பொருட்களுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால், அதற்கு வங்கி பொறுப்பேற்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய லாக்கர் விதிகள் குறித்து வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே தொடர்புகொள்ள ஆர்.பி.ஐ. அறிவுறுத்தி உள்ளது.

மொபைல் போன்களில் IMEI பதிவு அவசியம்:தொலைபேசி உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் அதன் இறக்குமதி, ஏற்றுமதி நிறுவனங்களுக்கும் இந்த ஆண்டு புதிய விதிகள் அமலாகின்றன். அதன்படி, ஒவ்வொரு தொலைபேசியின் ஐ.எம்.இ.ஐ. எண்ணையும் பதிவு செய்வது நிறுவனங்களுக்கு அவசியமாக்கப்பட்டுள்ளது. ஐ.எம்.இ.ஐ.யில் முறைகேடு வழக்குகளைத் தடுக்க தொலைத்தொடர்புத் துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க:புத்த மதத்தை அழிக்க சீனா முயற்சி: தலாய்லாமா பகீர் குற்றச்சாட்டு!

ABOUT THE AUTHOR

...view details