தமிழ்நாடு

tamil nadu

மணிப்பூர் கலவரம்: இம்பால் கிழக்கு, மேற்கு மாவட்டங்களில் ஊரடங்கில் தளர்வு, பதுங்கு குழிகள் அழிப்பு!

By

Published : Aug 4, 2023, 8:20 PM IST

மணிப்பூரில் மீண்டும் கலவரம் ஏற்பட்டதால் இம்பால் மேற்கு, கிழக்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு போடப்பட்ட நிலையில், பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக இன்று ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டது.

Manipur
மணிப்பூர்

மணிப்பூர்:மணிப்பூரில் பெரும்பான்மை சமூகமான மெய்தீஸ் சமூகத்தை எஸ்.டி. பிரிவில் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த மே 3ஆம் தேதி பழங்குடியின மாணவர் அமைப்பு நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. பழங்குடி மக்களின் போராட்டத்திற்கு எதிராக மெய்தீஸ் சமூகத்தினரும் போராட்டத்தில் இறங்கியதால், மணிப்பூர் கலவர பூமியாக மாறியது. வீடுகள், வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

பழங்குடியின பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவது, கொல்லப்படுவது போன்ற சம்பவங்களால் மணிப்பூர் மாநிலம் போர்க்களமாக மாறியது. வீடுகளை இழந்த ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 160-க்கும் மேற்பட்டோர் இந்த கலவரத்தில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மணிப்பூரில் காங்போக்பி மாவட்டத்தில் கலவரக்காரர்கள் இரண்டு குக்கி பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடந்த மாதம் வெளிச்சத்துக்கு வந்தது. கடந்த மே 4ஆம் தேதி நடந்த இந்த சம்பவம் சுமார் 75 நாட்களுக்குப் பிறகு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வீடியோ நாடு முழுவதும் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அரசியல் கட்சிகள், பொதுமக்கள் உள்ளிட்டப் பல்வேறு தரப்பினரும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மணிப்பூர் இனக்கலவரம் தொடர்பாகவும், குக்கி இனப் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாகவும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இது தொடர்பாக பிரதமர் மோடி விளக்கமளிக்கக் கோரி, மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமும் கொண்டு வந்துள்ளனர்.

இந்தச் சூழலில், மணிப்பூர் கலவரத்தில் உயிரிழந்த குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த 35 பேரின் உடல்களை ஒரே இடத்தில் அடக்கம் செய்ய திட்டமிட்டப்பட்டது. இந்த அறிவிப்பால் கடந்த சில நாட்களாக மீண்டும் பதற்றம் அதிகரித்தது.

இம்பால் மேற்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களின் அண்டை மாவட்டங்களில் மீண்டும் வன்முறைச் சம்பவங்கள் வெடிக்கத் தொடங்கின. நேற்று பிஷ்னுபூர் மாவட்டத்தில் உள்ள காங்வாய், பூகாக்சாவ் பகுதிகளில் நடந்த போராட்டங்களில் கலவரம் வெடித்தது. போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர். இதில் 25 பேர் படுகாயமடைந்தனர்.

காவல் நிலையங்களை தாக்கிய கும்பல் அங்கிருந்து ஆயுதங்களை பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த கலவரத்தைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இம்பால் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் நேற்று மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. பாதுகாப்புப் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், இம்பால் மேற்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களில் இன்று(ஆகஸ்ட் 4) காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது. எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் உடனடியாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், உணவுப் பொருட்கள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்க ஏதுவாக தளர்வு அறிவிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படியே இந்த தளர்வு அறிவிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இதனிடையே புதிதாக கலவரம் வெடித்த பிறகு, இதுவரை ஏழு சட்டவிரோத பதுங்கு குழிகள் அகற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். முன்னதாக இன்று, குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த 35 பேரின் உடல்களை ஒரே இடத்தில் அடக்கம் செய்யும் முடிவு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

இதையும் படிங்க: மணிப்பூரில் மீண்டும் கலவரம்... 20 பேர் படுகாயம்.. இம்பாலில் மீண்டும் ஊரடங்கு அமல்!

ABOUT THE AUTHOR

...view details