தமிழ்நாடு

tamil nadu

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி - அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை கோரிக்கை!

By

Published : Mar 21, 2023, 1:43 PM IST

அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்தக் கோரி எதிர்க் கட்சிகள் நடத்திய கடும் போராட்டத்தால் மீண்டும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

Etv Bharat
Etv Bharat

டெல்லி: நடப்பு நிதி ஆண்டுக்கான நாடாளுமன்ற கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023 - 24 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஹிண்டன்பெர்க், அதானி குழுமம் குறித்து வெளியிட்ட ஆய்வு அறிக்கையை நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்தக் கோரி எதிர்க் கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டன.

இதனால் பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் கட்ட அமர்வு, முடங்கியது. கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அம்ர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு கடந்த மார்ச் 13ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இரண்டாவது கட்ட அமர்வு தொடங்கி இரண்டாவது வாரத்தை எட்டிய நிலையில், நாடாளுமன்றம் தொடர் முடக்கத்தையே கண்டு வருகிறது. இந்திய ஜனநாயகம் குறித்து வெளியிட்ட சர்ச்சை கருத்துக்கு ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும் என்று ஆளும் பாஜக கூட்டணி கட்சியினரும், அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்தக் கோரி எதிர்க் கட்சிகளும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் இன்று (மார்ச். 21) வழக்கம் போல் நாடாளுமன்றம் கூடியது. கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் அதானி குழுமம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்தக் கோரி எதிர்க் கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். அவையை விட்டு வெளியேறிய காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சி எம்.பி.க்கள் அதானி விவகாரத்தில் கூட்டு குழு விசாரணை எனக் கோஷம் எழுப்பினர்.

நாடாளுமன்றத்தின் முதல் தளத்தில் நின்றவாறு கையில் பாஜக எதிர்ப்பு பதாகைகளை ஏந்தி எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்க் கட்சி எம்.பி.க்களின் வெளிநடப்பு போராட்டத்தால் நாடாளுமன்றமே பரபரப்பாக காணப்பட்டது. இதனால் மதியம் 2 மணி வரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

முன்னதாக எதிர்க் கட்சி தலைவர்கள் அனைவரும் நாடாளுமன்றத்தில் உள்ள தனது அறைக்கு ஆலோசனை மேற்கொள்ள வரவேண்டும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கேட்டுக் கொண்டார். அதேபோல் மாநிலங்களவையிலும் துணைக் குடியரசுத் தலைவர் ஜெகதிப் தன்கர் எதிர்கட்சி தலைவர்களை தன் அறைக்கு பேச்சுவார்த்தை நடத்த வருமாறு அழைப்பு விடுத்தார். மதியம் 2 மணிக்கு மேல் நாடாளுமன்றம் மீண்டும் துவங்குகிறது.

இதையும் படிங்க:அரசியல் பிரமுகர்களுடன் தொடர்பு - தொழிலதிபர் சொந்தமான இடங்களில் வருமான வரி ரெய்டு!

ABOUT THE AUTHOR

...view details