தமிழ்நாடு

tamil nadu

லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கோரி தீர்மானம் நிறைவேற்றம்!

By

Published : Nov 27, 2022, 9:45 PM IST

லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி, லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

LAHDC
LAHDC

கார்கில்: 2019ஆம் ஆண்டு, ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதில், ஜம்மு காஷ்மீருக்கு சட்டமன்றம் இருக்கும், லடாக் யூனியன் பிரதேசத்திற்கு சட்டமன்றம் இல்லை என்று மத்திய அரசு அறிவித்தது. இதற்கு ஜம்மு காஷ்மீர் மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.

யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டதற்கு முதலில் மகிழ்ச்சியடைந்த லே (Leh) மக்களும், லடாக்கிற்கு சட்டமன்றம் இல்லை என்ற அறிவிப்பால் அதிருப்திக்குள்ளாகினர். முந்தைய ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தில் லடாக் பிராந்தியத்தில் இருந்து 4 மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், தற்போது பிராந்தியம் முழுவதும் அதிகாரிகளின் கைகளுக்கு சென்றுவிட்டது.

அதேபோல், மொத்த லடாக்கிற்கும் ஒரே ஒரு நாடாளுமன்ற தொகுதி மட்டுமே உள்ளது. இதனால் தேர்தலின்போது லே மற்றும் கார்கில் மக்களிடையே பகைமை உண்டாகிறது. எனவே, தங்களது நிலம், கலாச்சாரம், உரிமைகள் அனைத்தும் பறிபோய்விடும் என்ற அச்சத்தில் லடாக் மக்கள் உள்ளனர். இதனால், அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்பு வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில் (LAHDC), லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் அடங்கிய தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளது. அதில், லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும், அரசியலமைப்புச் சட்டத்தின் 6வது அட்டவணையின் கீழ் லடாக்கை கொண்டு வர வேண்டும், லே மற்றும் கார்கில் மாவட்டங்களுக்கு தனித்தனி மக்களவை தொகுதிகளை கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

கார்கில் மற்றும் லே-க்கு தனித்தனி மக்களவை தொகுதிகள் இல்லாததால், பிராந்தியத்தில் மக்களிடையே பிரிவினை ஏற்படுகிறது என்றும், இது தேசப்பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது என்றும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சிலின் நிர்வாகக் குழு உறுப்பினர் புஞ்சோக் தாஷி சமர்ப்பித்தார். இது ஒரு வரலாற்று நாள் என்றும், இந்த தீர்மானம் லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சிலின் பெரும்பான்மை கவுன்சிலர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றும் தாஷி தெரிவித்தார்.

முன்னதாக கடந்த 10ஆம் தேதி, லே தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சிலும், அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்பைக் கோரி தீர்மானத்தை நிறைவேற்றியது.

இதையும் படிங்க:ஜி20 தலைமை பொறுப்பை உலக நலனுக்காக பயன்படுத்த வேண்டும் - பிரதமர் மோடி

ABOUT THE AUTHOR

...view details