தமிழ்நாடு

tamil nadu

நிபா அறிகுறி வந்தா... உடனே கோமாதான் - அதிர்ச்சி கொடுத்த மருத்துவர்

By

Published : Sep 6, 2021, 9:23 PM IST

நிபா வைரஸ் அறிகுறிகள் குறித்து, அதனைத் தடுக்கும் முறைகள் குறித்தும் நம்முடன் விவரிக்கிறார் மருத்துவர் ஸ்ரீ குமார்.

நிபா
Nipah

திருவனந்தபுரம்: கேரளாவில் கரோனா தொற்றுப் பரவல் குறையாத நிலையில், தற்போது நிபா வைரஸ் பாதிப்பு மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வைரஸ் தொடர்பான கூடுதல் தகவல்களுக்காக ராஜீவ் காந்தி உயிரி தொழில்நுட்ப மையத்தின் மருத்துவர் ஸ்ரீ குமாரை அணுகினோம். அவர் கூறியதாவது:

நிபா வைரஸ், 2018இல் முதன்முதலாகக் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கண்டறியப்பட்டது. பின்னர், 2019இல் கோச்சியில் ஒருவருக்கு நிபா பாதிப்பு தென்பட்டது.

நிபா வைரஸ்

அதைத் தொடர்ந்து, தற்போது செப்டம்பர் 5ஆம் தேதி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தென்பட்ட அதே மாவட்டத்தில் 12 வயது சிறுவனுக்கு நிபா பாதிப்பு தென்பட்டுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில், கேரளாவில் இதுவரை 22 பேர் நிபாவால் உயிரிழந்துள்ளனர். இருப்பினும், நிபா எப்படிப் பரவுகிறது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

2018இல் முகமது சபித் என்பவர்தான் நிபா பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். அப்போது, அவருடன் தொடர்பிலிருந்த நபர்களுக்கும் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. பழங்களை உண்ணும் வவ்வால்களால்தான் நிபா பரவுவதாக நம்பப்பட்டது.

நிபா அறிகுறிகள்

இதையடுத்து, அப்பகுதியில் இருக்கும் வவ்வால்களின் மாதிரிகளைச் சோதனை செய்ததில் நிபா வைரஸ் தென்பட்டது. ஆனால், அதன்மூலமாகத் தான் மனிதர்களுக்குத் தொற்று பரவியதா என்பதை அறிவியல்பூர்வமாக உறுதியாகவில்லை.

நிபா ஆபத்தான வைரஸ்

நிபா வைரஸ் மீண்டும் தோன்றியுள்ள கேரள சுகாதாரத் துறைக்கு மிகவும் சவாலாகத் தான் இருக்கும். நிபா மிகவும் ஆபத்தான வைரசாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதன் உயிரிழப்பு விகிதமும் அதிகமாகும்.

அறிகுறிகள்

காய்ச்சல், தலைவலி, மயக்கம், சுயநினைவு இழப்பது ஆகியவை பொதுவான அறிகுறிகள் ஆகும். இருமல், வயிற்று வலி, குமட்டல், வாந்தி, சோர்வு மற்றும் மங்கலான பார்வை ஆகியவை நோயாளிகளுக்கு அரிதாகவே காணப்படுகின்றன.

வவ்வால்கள் மூலம் நிபா பரவல்

நோய்ப் பரவல் வேகம்

நிபா வைரஸ் உடலுக்குள் புகுந்து நான்கு முதல் 14 நாள்களுக்குள் அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும். சிலருக்கு 21 நாள்களுக்குப் பிறகு அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், அறிகுறிகள் தென்பட்ட ஓரிரு நாளில் நோயாளிகள் கோமா நிலைக்குச் சென்றுவிடுவார்கள்.

இந்த வைரஸ் மூளையையும், நுரையீரலையும் தாக்குகிறது. நோயாளிக்கு அறிகுறிகளைக் காட்டத் தொடங்கிய பின்னரே, ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவுகிறது.

நிபா சிகிச்சைகள்

அதீத ஜாக்கிரதை தேவை

நிபா வைரஸ் அதி வேகமாகப் பரவக்கூடியது. பழங்களை உண்ணும் வவ்வால்களிடமிருந்து நிபா பரவுவதாகக் கூறப்படுகிறது. எனவே, வவ்வால்கள் வசிக்கும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வவ்வால்கள் கடித்த பழங்களைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

பழங்களையும், காய்கறிகளையும் சாப்பிடுவதற்கு முன்பு சுத்தமாகக் கழுவ வேண்டும். அதே போல, நிபா அறிகுறிகள் தென்படும் நோயாளிகளைக் கவனிப்போரும் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும், தகுந்த இடைவெளியைப் பின்பற்ற வேண்டும், கைகளை அவ்வப்போது சுத்தம் செய்திட வேண்டும்.

நிபா ஆபத்தான வைரஸ்

நிபா வைரஸ் தடுப்பது எப்படி?

நிபா வைரசிலிருந்து தப்பிக்க அரசு வெளியிட்ட நெறிமுறைகளை மக்கள் நிச்சயம் பின்பற்ற வேண்டும். நிபா இறந்தவரின் உடலிலிருந்து பரவக்கூடியது.

எனவே, இறந்தவர்களின் உடலை எரிப்பதில் நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். சடலத்தை எரிப்பவர் பிபிஇ கிட் அணிந்திருக்க வேண்டும். குறைந்த அளவிலான நபர்களே இறுதிச்சடங்கில் பங்கேற்ற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

இறந்தவரின் உடலில் இருந்தும் நிபா பரவுமாம்

தற்போது, கரோனா நெறிமுறைகளான முகக்கவசம் அணிவது, தகுந்த இடைவெளியைப் பின்பற்றுவது ஆகியவை நடைமுறையில் இருப்பதால், நிபா வைரஸ் பரவாது எனச் சுகாதாரச் துறை சார்பில் நம்பப்படுகிறது.

தற்போது கோழிக்கோட்டில் அறிகுறிகள் உள்ள எட்டு பேர் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிப்பில் உள்ளனர். 2018-19இல் வெற்றிகரமாக நிபாவை கேரள அரசு கட்டுப்படுத்தியுள்ளதால், இம்முறையும் கட்டுப்படுத்திவிடும் என நம்பிக்கை உள்ளது எனத் தெரிவிக்கிறார்.

இதையும் படிங்க:நிபா வைரஸ் உருவான இடத்தை தேடும் பணியில் சுகாதாரத் துறை

ABOUT THE AUTHOR

...view details