தமிழ்நாடு

tamil nadu

காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு எப்போது? - கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் விளக்கம்!

By

Published : Jul 22, 2023, 7:30 AM IST

கர்நாடக மாநில மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்த பிறகு மீதமுள்ள தண்ணீரை தமிழகத்திற்கு திறந்துவிடுவோம் என அம்மாநில துணை முதலமைச்சரும், நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

காவிரி ஆறு, டி.கே.சிவக்குமார்(கோப்புப்படம்)
காவிரி ஆறு, டி.கே.சிவக்குமார்(கோப்புப்படம்)

பெங்களூரு: காவிரியில் தமிழகத்திற்கான தண்ணீரைத் திறந்துவிட உத்தரவிடக்கோரி மத்திய ஜல்சக்தி அமைச்சகத்திற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம் தொடர்பாகச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குக் கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

காவிரியில் தமிழகத்திற்கான நீரை உடனடியாக திறந்துவிட உத்தரவிடக்கோரி மத்திய ஜல்சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் செகாவாத்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதத்தில்,"தென்மேற்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதாலும் ஜூலை மாதத்தில் மழை வேகமெடுத்துள்ள நிலையில் 2 அணைகளிலிருந்தும் கர்நாடகம் நீர் திறந்து விடவில்லை.

இதனால், மேட்டூர் அணையில் நீர் இருப்பு வேகமாகக் குறைந்து வருகிறது. தற்போதைய நீர் இருப்பு 20 நாட்கள் மட்டுமே குறுவை பாசனத்திற்குப் பயன்படும், காவிரியில் நீர் திறந்துவிட்டால் மட்டுமே குறுவை சாகுபடியை தடையின்றி மேற்கொள்ள முடியும். காவிரி நீரை நம்பியுள்ள மாவட்டங்களில் குறுவை சாகுபடி தொடர்பான விவரங்களையும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க:நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் சேவை ஒப்பந்தம்; நன்மைகள் என்ன..?

அந்த கடிதத்தை தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், டெல்லியில் மத்திய அமைச்சர் கஜேந்திர செகாவாத்திடம் நேரில் வழங்கினார். அந்த கடிதத்தை பெற்றுக்கொண்ட அமைச்சர் செகாவாத், காவிரியில் தமிழகத்திற்கான நீரைத் திறந்துவிட அறிவுறுத்துவதாக உறுதி அளித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக, பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக மாநில துணை முதலமைச்சரும், அம்மாநில நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார், "கர்நாடக மக்களின் குடிநீர்த் தேவையைத் தாண்டி அணையில் மீதம் உள்ள தண்ணீரைத் தமிழகத்திற்குத் திறந்து விடுவோம் என்றும் எதிர்பார்த்த அளவு மழை இல்லாததால் கபினி மற்றும் கிருஷ்ண சாகர் அணையில் நீர் இருப்பு குறைவாகவே உள்ளது. குறிப்பாக பெங்களூரு மக்களுக்குக் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்துவிட்டு மீதமுள்ள நீரை தமிழகத்திற்குத் திறந்துவிடுவோம்" என தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின் படி ஜூன் மாதத்திற்குக் கொடுக்க வேண்டிய 9.1 டி.எம்.சி தண்ணீர் மற்றும் ஜூலை மாதத்திற்கான தண்ணீர் என 43 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடக மாநில அரசு தமிழகத்திற்குத் திறந்துவிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:‘இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமல்படுத்த வேண்டும்’ - பிரதமர் மோடி வலியுறுத்தல்!

ABOUT THE AUTHOR

...view details