தமிழ்நாடு

tamil nadu

Karnataka free bus:மகளிருக்கு இலவச பேருந்து பயணம் - கண்டக்டராக மாறிய முதலமைச்சர் சித்தராமையா!

By

Published : Jun 11, 2023, 7:27 PM IST

Updated : Jun 11, 2023, 7:34 PM IST

கர்நாடகாவில் 'சக்தி திட்டம்' மூலம் அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பேருந்து பயண வசதியை முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் ஆகிய இருவரும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

Karnataka
கர்நாடகா

கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் கடந்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த தேர்தலில், தனிப் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் பொறுப்பேற்றனர்.

முதல் நாளிலேயே காங்கிரஸ் கட்சியின் முக்கியமான ஐந்து வாக்குறுதிகளை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய் உரிமைத் தொகை, மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம், மகளிருக்கு இலவச பேருந்து பயணம், மாதம் 10 கிலோ இலவச அரிசி, வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் 3,000 ரூபாய் - டிப்ளமா ப‌டித்தவர்களுக்கு 1,500 ரூபாய் உதவித் தொகை ஆகிய ஐந்து வாக்குறுதிகள் உடனடியாக நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் சித்தராமையா அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து, ஐந்து வாக்குறுதிகளும் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அந்தவகையில், மாதம்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மகளிருக்கு டிக்கெட் வழங்கிய முதலமைச்சர் சித்தராமையா

இந்த நிலையில், கர்நாடகாவில் அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பேருந்து பயணத்தை வழங்கும் 'சக்தி திட்டம்' (Karnataka Govt Launches Shakti Scheme for Women Free bus service) இன்று (ஜூன் 11) தொடங்கப்பட்டது. பெங்களூரில் உள்ள அம்மாநில தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் இருவரும் கொடியசைத்து இந்த திட்டத்தை தொடங்கி வைத்தனர். அதன் பின்னர், இருவரும் இந்த திட்டத்தில் முதல்முறையாக பேருந்தில் ஏறி பயணம் செய்யவிருந்த பெண்களிடம் பேசினர். பிறகு, இலவச பயணத்திற்கான பயணச்சீட்டுகளை மகளிருக்கு வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் சக்தி திட்டத்தின் சின்னமும் வெளியிடப்பட்டது. ஐந்து பெண்களுக்கு 'சக்தி' ஸ்மார்ட் கார்டுகள் விநியோகிக்கப்பட்டன. பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் சித்தராமையா, "முன்பு 30 சதவீதம் பெண்கள் பேருந்துகளில் பயணம் செய்தனர். இது பாஜக ஆட்சியின்போது 24 சதவீதமாகக் குறைந்தது என்று கூறிய அவர், பெண்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை பாஜகவினர் விரும்பவில்லை" என்று சாடினார்.

இவரைத்தொடர்ந்து பேசிய கர்நாடக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, "கர்நாடக அரசின் சேவா சிந்து (Seva Sindhu Bus Pass) இணையதளத்தில் பதிவு செய்து இந்த சக்தி ஸ்மார்ட் கார்டுகளை பெண்கள் பெற்றுக்கொள்ளலாம். ஸ்மார்ட் கார்டுகளை விண்ணப்பித்து பெற மூன்று மாதங்கள் கால அவகாசம் வழங்கப்படும் என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், சாதாரண பேருந்துகளிலும், விரைவுப் பேருந்துகளிலும் இந்த கார்டு மூலம் மகளிர் இலவசமாக பயணம் செய்யலாம் என்றும் இணைய வசதி இல்லாதவர்கள் அரசின் சேவை மையங்களை அணுகி விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். மகளிரின் பயணத்தை எளிதாக்குவதே இந்த திட்டத்தின் நோக்கம் என்று கூறியதோடு, மாநிலத்தில் பேருந்து பற்றாக்குறை உள்ள பகுதிகளில் கூடுதலாக அரசு பேருந்துகள் இயக்கப்படும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹெலிகாப்டர் ரைடு! உற்சாகப்படுத்திய சத்தீஸ்கர் அரசு

Last Updated :Jun 11, 2023, 7:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details