தமிழ்நாடு

tamil nadu

DK Shivakumar: டிகே சிவகுமாரின் குற்றச்சாட்டுக்கு ஆளான டிஜிபி சிபிஐ இயக்குநர் பதவிக்கு பரிந்துரை!

By

Published : May 14, 2023, 12:42 PM IST

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார் குற்றம் சாட்டிய அம்மாநில டிஜிபி, சிபிஐ இயக்குநர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

டிகே சிவகுமாரின் குற்றச்சாட்டுக்கு ஆளான டிஜிபி சிபிஐ இயக்குனர் பதவிக்கு பரிந்துரை
டிகே சிவகுமாரின் குற்றச்சாட்டுக்கு ஆளான டிஜிபி சிபிஐ இயக்குனர் பதவிக்கு பரிந்துரை

ஹைதராபாத்: சிபிஐ(CBI) எனப்படும் மத்திய புலனாய்வு அமைப்பின் இயக்குநராக தற்போது சுபோத் குமார் ஜாய்ஸ்வால் பொறுப்பு வகித்து வருகிறார். மகாராஷ்டிராவின் 1985 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான ஜாய்ஸ்வால், கடந்த 2021ஆம் ஆண்டு மே 26 அன்று சிபிஐ இயக்குநராக பொறுப்பேற்றுக் கொண்டார். சிபிஐ இயக்குநரின் பதவிக்காலம் 2 ஆண்டுகள் என்பதால், வருகிற 25ஆம் தேதி உடன் அவரது பதவிக் காலம் முடிவடைய உள்ளது.

இந்த நிலையில், புதிய சிபிஐ இயக்குநரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மக்களவை எதிர்கட்சித் தலைவர்கள் அடங்கிய உயர் மட்டக்குழுவின் பரிந்துரையின் பேரில்தான் சிபிஐ இயக்குநர் நியமனம் செய்யப்படுகிறார். அந்த வகையில், நேற்று (மே 13) பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மக்களவை எதிர்கட்சித் தலைவர்கள் அடங்கிய குழு கூடியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதன் அடிப்படையில், 3 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளை இக்குழு பரிந்துரைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இது தொடர்பான ஆதாரங்களின்படி, கர்நாடகா, டெல்லி மற்றும் பிற மாநிலங்களில் இருந்து 3 ஐபிஎஸ் அதிகாரிகளை இக்குழு பரிந்துரைத்துள்ளதாக தெரிகிறது. முக்கியமாக, கர்நாடகா டிஜிபி பிரவீன் சூட் இந்த பரிந்துரை பட்டியலில் உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கர்நாடகாவின் 1986 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான பிரவீன் சூட், அம்மாநிலத்தில் டிஜிபியாக பதவி வகித்து வருகிறார். முன்னதாக, கர்நாடகாவில் ஆட்சி செய்து வந்த பாஜக அரசை காப்பாற்றுவதற்காக பல்வேறு வகைகளில் டிஜிபி பிரவீன் சூட் பாதுகாப்பு அளித்ததாக, கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார் கடந்த மார்ச் மாதத்தில் குற்றம் சாட்டினார்.

இதனால் டிஜிபி - டிகே சிவகுமார் மோதல் இருந்து வந்தது. இதனிடையே, நேற்றைய கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் முடிவின்படி, காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி கர்நாடகாவில் அதிகாரப்பூர்வமாக உருவாக உள்ள நிலையில், ஏற்கனவே டிகே சிவகுமார் உடன் மோதல் போக்குடன் உள்ள டிஜிபியை மத்திய உயர் மட்டக்குழு புதிய சிபிஐ இயக்குநருக்கு பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் அதீர் ரஞ்சன் செளத்ரி கூறுகையில், “இந்த குழு கூடியது. இதன் முடிவில் புதிய சிபிஐ இயக்குநர் பதவிக்கு 3 பேரின் பெயர்களை அமைச்சரவையின் நியமனக் குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது” என தெரிவித்தார். அதேநேரம், சிபிஐ இயக்குநரின் பதவிக்காலம் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படலாம்.

இதையும் படிங்க:இந்திரா காந்திக்கு மட்டுமல்ல காங்கிரசுக்கும் ComeBack கொடுத்த தொகுதி! எது தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details