தமிழ்நாடு

tamil nadu

மேம்படுத்தப்பட்ட ரயில் டிக்கெட் முன்பதிவு தளம் தொடக்கம்

By

Published : Dec 31, 2020, 6:34 PM IST

ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான ஐஆர்சிடிசியின் மேம்படுத்தப்பட்ட இணையதளத்தின் செயல்பாட்டை மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் இன்று (டிசம்பர் 31) தொடக்கி வைத்தார்.

ரயில் டிக்கெட் முன்பதிவு தளம்
ரயில் டிக்கெட் முன்பதிவு தளம்

டெல்லி: ரயில் டிக்கெட் ஆன்லைன் முன்பதிவுக்கான இந்திய ரயில்வேயின் மேம்படுத்தப்பட்ட ஐஆர்சிடிசி இணையதளத்தை மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயில் இன்று (டிச.31) தொடக்கி வைத்தார். இதில் பயனாளர்களின் வசதிகளை எளிமைப்படுத்தும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. புத்தாண்டு பரிசாக இந்த மேம்படுத்தப்பட்ட இணையதளத்தை பயணிகளுக்கு வழங்கியுள்ளதாக, ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பேசிய பியூஷ் கோயல், " நாட்டிற்கு தொடர்ந்து சேவை புரிய ரயில்வே துறை உறுதிபூண்டுள்ளது. அதேபோல் ரயில்வே பயணம் சிறப்பானதாக அமைய பல்வேறு சேவைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த இ-டிக்கெட் இணையதளம் பயணிகள் எளிமையாக தங்களது டிக்கெட்டினை முன்பதிவு செய்வதை உறுதிசெய்யும்.

இவ்வாறு இணையதளத்தை தொடர்ந்து மெருகேற்றி, டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் உலகின் சிறந்த இணையதளமாக உருவெடுக்க ஐஆர்சிடிசி பணியாற்ற வேண்டும்" என்றார்.

"இந்த மேம்படுத்தப்பட்ட இணையதளத்தின் மூலம், டிக்கெட் முன் பதிவு செய்யும் நேரம் குறைக்கப்படுவதுடன், ரயில் சேவைகள் தொடர்பாக தேடுவது, ரயில் சேவையை தேர்ந்தெடுப்பது ஆகியவை எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. அவ்வப்போது ஒரு குறிப்பிட்ட ரயில் பாதையில் பயணிப்பவர்கள் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த விவரத்தை பயன்படுத்தி மீண்டும் எளிதில் முன்பதிவு செய்யும் வசதி இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

முன்பதிவுக்கான கட்டணத்தை செலுத்தும் போது திரையில், முன்பதிவு செய்த விவரங்கள் தோன்றும். எனவே, மீண்டும் ஒருமுறை தகவல்களை சரிபார்த்து பயணிகள் கட்டணத்தை செலுத்த இயலும். இந்த இணையதளம், செயலியின் மூலம் பயணிகளின் தகவல்கள் திருடப்படாத வகையில், சைபர் பாதுகாப்பு மேலும் வலுபடுத்தப்பட்டுள்ளது" என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

தற்போது வரை ஐஆர்சிடிசியில் 6 கோடி பயனாளர்கள் உள்ளனர். இந்த இணையதளம் மூலம் தினமும் 8 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன.

இதையும் படிங்க:நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி ஒத்திகை!

ABOUT THE AUTHOR

...view details