தமிழ்நாடு

tamil nadu

இலங்கைக்கு 1 பில்லியன் டாலர் கடன் உதவி... இந்தியாவின் அடுத்த காய் நகர்த்தல்!

By

Published : May 30, 2023, 7:20 PM IST

இலங்கைக்கு வழங்கிய 1 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் உதவியை மேலும் ஒராண்டுக்கு நீட்டிக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது.

Credit
Credit

டெல்லி : பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா வழங்கிய 1 பில்லியன் டாலர் கடன் உதவி திட்டம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

கடும் பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் இலங்கையில், அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து நிதி நெருக்கடி ஏற்பட்டது. அந்நிய செலாவணி கையிருப்பு குறைவால் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள், மருத்துவ உபகரணங்கள், உயிர்க் காக்கும் கருவிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யவது வெகுவாக தடைபட்டது.

அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி தடையால், உள்நாட்டில் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்தது. கரோனா காலத்தில் சுற்றுலாத் துறை முடங்கியதால் அதில் இருந்து கிடைத்த வருமானம் முற்றிலும் குறைந்து போனதால் பெரும் நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் சூழலுக்கு இலங்கை அரசு தள்ளப்பட்டதாக கூறப்பட்டது.

அதேநேரம் நாட்டை ஆளும் ராஜபக்சே குடும்பம் தான் நிதி நெருக்கடிக்கு காரணம் எனக் கூறி பொது மக்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிபர் ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகினார். தொடர்ந்து, ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான அரசு ஆட்சியை கைப்பற்றி தொடர்ந்து நடத்தி வருகிறது.

நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்த இலங்கைக்கு இந்தியா பக்கபலமாக இருந்து உதவி வருகிறது. அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் என இந்தியாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் தமிழ்நாட்டில் இருந்தும் இலங்கைக்கு மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வெளிநாடுகளில் இருந்து கொள்முதல் செய்ய இலங்கை அரசுக்கு, இந்தியா 1 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான கடன் உதவி வழங்கியது. மேலும் சர்வதேச நாணய நிதியமான ஐ.எம்.எஃப்பும் இலங்கைக்கு உதவ கடன் தொகை அறிவித்து உள்ளது.

இந்நிலையில், இலங்கைக்கு வழங்கப்பட்ட ஒரு பில்லியன் டாலர் கடன் உதவி திட்டத்தை மேலும் ஓராண்டுக்கு இந்தியா நீட்டித்து உள்ளது. இதற்காகன ஒப்பந்தங்களில் இந்திய மற்றும் இலங்கை அமைச்சர்கள், அதிகாரிகள் கையெழுத்திட்டனர். முன்னதாக கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான கடன் திட்டத்தை இந்தியா வழங்கியது.

இந்த திட்டத்தின் மூலம் நாட்டில் நிலவும் எரிபொருள் மற்றும் சுகாதார பற்றாக்குறையை இலங்கை அரசு தீர்த்து வந்தது. 2023ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் இந்த ஒப்பந்தம் காலாவதியான நிலையில், மேலும் ஒரு ஆண்டு நீட்டித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. இது தொடர்பாக காணொலி வாயிலாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இலங்கை நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, இலங்கை நிதித் துறையின் மூத்த அதிகாரிகள், இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் எஸ்.பி.ஐ வங்கியின் நிர்வாகக் குழு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து கடன் உதவியை ஒராண்டுக்கு நீட்டிக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த கடன் உதவி நீட்டிப்பு திட்டத்தின் மூலம் அத்தியவாசிய பொருட்களை கொள்முதல் செய்ய திட்டமிட்டு உள்ளதாக இலங்கை நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க :கங்கை முன் திரண்ட மல்யுத்த வீரர், வீராங்கனைகள்! போலீசாருடன் வாக்குவாதம்.. உச்சக்கட்ட பரபரப்பு!

ABOUT THE AUTHOR

...view details