தமிழ்நாடு

tamil nadu

8 வயது சிறுவன் கழுத்து நெரித்துக் கொலை: நரபலியா? திடுக்கிடும் பின்னணி!

By

Published : Apr 21, 2023, 2:42 PM IST

ஹைதராபாத்தில் 8 வயது சிறுவன் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திருநங்கை உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். சிறுவன் நரபலி கொடுக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ள நிலையில், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

சிறுவன் படுகொலை
Boy murder

ஹைதராபாத்:தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள சனாத் நகரை சேர்ந்தவர் வாசிம் கான். ரெடிமேட் துணிக்கடை நடத்தி வருகிறார். இவரது 8 வயது மகன் அப்துல் வாஹித் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிறுவன் சடலமாக மீட்பு:சிறுவன் அப்துல் வழக்கம் போல் நேற்று (ஏப்ரல் 20) வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென காணாமல் போனார். பல இடங்களில் பெற்றோர் தேடியும் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து மகனை காணவில்லை என வாசிம் கான் போலீசில் புகார் அளித்தார். பின்னர் சிறுவனை போலீசார் தேடி வந்தனர். இதற்கிடையே, மூசாப்பேட்டையில் உள்ள கால்வாயில் சிறுவன் அப்துல் சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

திருநங்கை கைது: விரைந்து சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், சிறுவனை கொலை செய்தது அதே பகுதியை சேர்ந்த திருநங்கை ஃபிசா என்பது தெரியவந்தது. இதையடுத்து ஃபிசா உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். சிறுவன் அப்துலை கொலை செய்து, சடலத்தை கால்வாயில் வீசியதாக கொலையாளி ஃபிசா ஒப்புக் கொண்டார்.

பிரச்னை என்ன?: திருநங்கை ஃபிசா நிதி நிறுவனம் நடத்தி வரும் நிலையில், அவருக்கும், சிறுவன் அப்துலின் தந்தை வாசிமுக்கும் அண்மையில் பணம் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று (ஏப்ரல் 20) அப்துலிடம் குளிர்பானம் வாங்கிவர சொல்லியிருக்கிறார் ஃபிசா. இதையடுத்து கடைக்கு சென்ற அப்துல், குளிர்பானத்தை வாங்கிக் கொண்டு ஃபிசாவின் வீட்டுக்கு சென்றிருக்கிறார். அப்போது சிறுவனின் கழுத்தை நெரித்த ஃபிசா, தண்ணீர் நிரம்பியிருந்த பக்கெட்டுக்குள் மூழ்கடித்து கொலை செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. சிறுவன் அப்துலின் உடலில் எலும்புகள் அனைத்தும் உடைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர் ஆட்டோ ஓட்டுநர் உதவியுடன் சடலத்தை பையில் போட்ட ஃபிசா, கால்வாயில் தூக்கி வீசியது தெரியவந்துள்ளது.

சிறுவன் நரபலி?: இதற்கிடையே, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஃபிசாவின் வீட்டை அடித்து நொறுக்கியதுடன், சிறுவன் நரபலி கொடுக்கப்பட்டதாக குற்றம்சாட்டினர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதுகுறித்து காவல் துணை ஆணையர் ஸ்ரீனிவாச ராவ் கூறுகையில், "பணப் பிரச்னையில் தான் இக்கொலை நடந்துள்ளது. சிறுவன் நரபலி கொடுக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கூறியுள்ளனர். அந்த கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.

அமைச்சர் உறுதி: இந்நிலையில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட இடத்தில் அமைச்சர் ஸ்ரீநிவாஸ் யாதவ் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, "குற்றவாளிகள் ஒருபோதும் தப்பிக்க முடியாது. நீதிமன்றத்தில் இந்த வழக்கு விரைவாக நடத்தப்பட்டு, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தரப்படும்" என உறுதியளித்தார்.

இதையும் படிங்க: டெல்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு - பெண் படுகாயம்!

ABOUT THE AUTHOR

...view details