தமிழ்நாடு

tamil nadu

மழையால் ப்ளம்ஸ் உற்பத்தி பாதிப்பு; கலக்கத்தில் காஷ்மீர் விவசாயிகள்

By

Published : Jul 9, 2023, 3:28 PM IST

காஷ்மீர் பகுதிகளில் அதிகளவில் ப்ளம்ஸ் பழங்கள் விளைவிக்கப்படும் நிலையில், இந்த ஆண்டு நிலவிய சாதகமற்ற வானிலையால் விளைச்சல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

Farmers are worried that plum cultivation affected due to unfavorable weather conditions in Kashmir region
Farmers are worried that plum cultivation affected due to unfavorable weather conditions in Kashmir region

ஸ்ரீநகர்: காஷ்மீரில் செர்ரி மற்றும் ஸ்ட்ராபெர்ரிகளுக்கு பிறகு ப்ளம்ஸ் பழங்களை அதிகளவில் விவசாயிகள் மகசூல் செய்கின்றனர். ஜூலை நடுப்பகுதியிலிருந்து துவங்கும் இந்த ப்ளம்ஸ் சீசன் ஆகஸ்ட் இறுதி வரை நீள்கிறது. இந்த ஆண்டு மழையால் ஸ்ட்ராபெர்ரி மற்றும் செர்ரி மகசூல் பாதிக்கப்பட்டதை போலவே ப்ளம்ஸ் மகசூலும் பாதிக்கப்பட்டு உள்ளது.

ப்ளம்ஸ் உற்பத்தி குறைந்தது குறித்து 65 வயதான விவசாயி குலாம் ரசூல், “அதிக சிரத்தை எடுத்து கவனித்த போதிலும் கடந்த ஆண்டு கிடைத்த மகசூல் கூட இந்த ஆண்டு கிடைக்கவில்லை. கடந்த காலங்களில் எங்கள் பழத்தோட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பெட்டிகள் ப்ளம்ஸ் விற்பனை செய்தோம். ஆனால் இந்த ஆண்டு மழையால் விளைச்சல் மிகவும் பாதிக்கப்பட்டதால் மிகக் குறைந்த அளவிலான பெட்டிகளே விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

விளைந்த குறைந்த அளவிலான பழங்களும் மழையால் உருவான வடுக்களுடன் பொலிவற்று காணப்பட்டதால் சரியான விலை கிடைக்காமல் குறைந்த விலைக்கே விற்பனை செய்ய வேண்டியதுள்ளது” எனத் தெரிவித்தார். ஸ்ரீநகரின் புறநகர் பகுதியில், குலாம் ரசூல் தனது தோட்டங்களில் ஆப்பிள்களை மட்டுமே வளர்த்து வந்தார், ஆனால் பின்னர் குறைந்த பராமரிப்பும், நல்ல லாபமும் கொடுத்ததால் ப்ளம்ஸ் பழங்களை சாகுபடி செய்யத்துவங்கி உள்ளார்.

ஆப்பிள்களைப் போல் இல்லாமல், ப்ளம்ஸ்க்கு குறைந்த பராமரிப்பே போதுமானது. ஒரு முறை மட்டும் மருந்து தெளித்தாலே போதுமானது. இதனால், ப்ளம்ஸ் சாகுபடியில் வருமானமும் சிறப்பாக இருந்தது. முந்தைய ஆண்டும் விளைச்சல் குறைவாகத்தான் இருந்தது ஆனால் இந்த ஆண்டைவிட கடந்த ஆண்டு விளைச்சல் அதிகம் தான்.

ஐந்து கிலோ எடையுள்ள பிளம்ஸ் பெரிய பெட்டி, 200 முதல், 250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதே நேரத்தில், இரண்டு கிலோ கொண்ட சிறிய பெட்டி, 100 முதல், 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது எனவும் அவர் தெரிவித்தார். காஷ்மீர் விவசாயிகள் தொடர்ந்து அதிகளவு ப்ளம்ஸ் சாகுபடியில் ஈடுபடுவது சுவாரஸ்யமானது.

முந்தைய மூன்று பருவங்களில் காஷ்மீரில் சராசரியாக 8,000 டன்கள் என்ற அளவில் ப்ளம்ஸ் பழம் உற்பத்தி செய்யப்பட்டது என தோட்டக்கலைத் துறை தெரிவித்துள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் சுமார் 1500 ஹெக்டேர் நிலத்தில் ப்ளம்ஸ் பயிரிடப்படுகிறது. மத்திய காஷ்மீரில் உள்ள புட்காம் மாவட்டம் பள்ளத்தாக்கு பகுதிகளிலும் அதிக அளவில் ப்ளம்ஸ் உற்பத்தி செய்யப்படுகிறது.

இங்கு உற்பத்தி செய்யப்படும் 11,860 டன்கள் ப்ளம்ஸ்-இல் ஜம்மு பள்ளத்தாக்கில் 4,150 டன்கள், காஷ்மீர் பள்ளத்தாக்கில் 7,710 டன்கள், புட்காம் பகுதியில் 2,719 டன்கள் உற்பத்தி செய்யப்படுகிறது என ஜம்மு மற்றும் காஷ்மீரின் தோட்டக்கலை இயக்குனரகத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

காஷ்மீரில் பயிரிடப்படும் மூன்று முக்கிய ப்ளம்ஸ் வகைகளில் சென்ட்ரோஸ் ப்ளம் ஒன்றாகும். இது ப்ளம் உற்பத்தியாளர்களுக்கு குறிப்பிடத்தக்க வருவாய் ஆதாரமாக இருந்து வருகிறது. பள்ளத்தாக்கின் பல பகுதிகளிலும், ஸ்ரீநகர் பகுதிகளிலும் இந்த ரக ப்ளம்ஸ் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. மற்ற இரண்டு வகைகளான சில்வர் ப்ளம் மற்றும் சுகந்தரா ப்ளம் ஆகியவை குறைந்த அளவில் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன.

பரிம்போரா பழச் சந்தையின் தலைவர் பஷீர் அஹ்மத் பஷீர் ஈ டிவி பாரத்திற்கு தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டியில், “இந்த ஆண்டு உற்பத்தி மிகவும் குறைவாக உள்ளது. இந்த ஆண்டு நிலவிய சாதகமற்ற வானிலை அனைத்து இடங்களிலும் ப்ளம்ஸ் உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வானிலை காரணமாக சேதமடைந்த மொத்த ப்ளம்ஸ் உற்பத்தி குறித்து நாங்கள் இன்னமும் கணக்கிடவில்லை.

பரிம்போரா சந்தையிலிருந்து பிளம்ஸ் பெரும்பாலும் டெல்லி மற்றும் பஞ்சாப் சந்தைகளுக்கு நேரடியாகக் கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் அவை அங்கிருந்து மற்ற சந்தைகளில் விற்கப்படுகின்றன. ப்ளம்ஸ் பழம் எளிதில் உடைந்து சேதமடையக்கூடியது என்பதால் பாதி பழுத்த நிலையில் உள்ள பழங்களை பறித்து, பெட்டிகளில் அடைத்து விற்பனைக்கு அனுப்பப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: முல்லைப் பெரியாறு அணையில் நீர்வரத்து அதிகரிப்பு; விவசாயிகள் மகிழ்ச்சி

ABOUT THE AUTHOR

...view details