தமிழ்நாடு

tamil nadu

2ஜி விவகாரம்: நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட முன்னாள் சிஏஜி வினோத் ராய்!

By

Published : Oct 28, 2021, 10:25 PM IST

2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் தவறான கருத்தை தெரிவித்ததற்காக முன்னாள் காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபமிடம், முன்னாள் சிஏஜி வினோத் ராய் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரினார்.

முன்னாள் சிஏஜி வினோத் ராய், Ex-CAG Vinod Rai, Cong leader Sanjay Nirupam
முன்னாள் சிஏஜி வினோத் ராய்

டெல்லி: காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான சஞ்சய் நிருபம், முன்னாள் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) வினோத் ராய் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

வினோத் ராய், கடந்த 2014ஆம் ஆண்டு எழுதிய புத்தக்கத்திலும், பல தொலைக்காட்சி நேர்காணல்களிலும் 2ஜி அலக்கற்றை விவகாரத்தில் தன்னைப் பற்றி அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாகவும், தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாகவும் சஞ்சய் நிருபம் இந்த வழக்கை தொடர்ந்திருந்தார்.

பிரமாணப் பத்திரம் தாக்கல்

இந்த வழக்கு விசாரணை டெல்லி பாட்டீயாலா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், வினோத் ராய், சஞ்சய் நிருபமிடம் மன்னிப்பு கேட்டு நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் ஒன்றை இன்று (அக். 28) தாக்கல் செய்துள்ளார்.

அதில்," 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தின் சிஏஜி அறிக்கையில் இருந்து அப்போதைய பிரமதர் மன்மோகன் சிங்கின் பெயரை நீக்கவேண்டும் என்று அழுத்தம் கொடுத்த எம்.பி.,களில் சஞ்சய் நிருபமும் ஒருவர் என கவனக்குறைவாகவும் தவறுதலாகவும் நான் குறிப்பிட்டுவிட்டேன்.

வழக்கு முடித்துவைப்பு

சஞ்சய் நிருபம் குறித்து நான் எழுதிய, நேர்காணலில் கூறிய அனைத்து கருத்துக்களும் தவறானது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். நான் கூறிய கருத்துக்களால் சஞ்சய் நிருபமும், அவரது குடும்பத்தினரும் அடைந்திருக்கும் மனவேதனையை புரிந்துகொள்கிறேன். எனவே, அவர்களிடம் எனது நிபந்தனையற்ற மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன்.

சஞ்சய் நிருபம் மற்றும் அவரது குடும்பத்தினர் எனது இந்த மன்னிப்பை ஏற்றுக்கொண்டு வழக்கை முடித்துவைப்பார்கள் என நம்புகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

வினோத் ராயின் இந்த மன்னிப்பை சஞ்சய் நிருபம் ஏற்றுக்கொண்டார். இதன்பின்னர், சஞ்சய் நிருபம் தொடர்ந்த வழக்கை முடித்துவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

மக்கள் முன் மன்னிப்பு கேட்க வேண்டும்

இதுகுறித்து, சஞ்சய் நிருபம் தனது ட்விட்டர் பக்கத்தில்," 2ஜி அலைக்கற்றை, நிலக்கரி ஒதுக்கீடு விவகாரம் ஆகியவற்றில் வினோத் ராய் அளித்த பொய்யான அறிக்கைகளுக்கு நாட்டு மக்கள் முன்னர் மன்னிப்பு கேட்க வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.

2ஜி, நிலக்கரி விவகாரங்களில் மன்மோகன் சிங் மீதும், காங்கிரஸ் - யூபிஏ அரசு மீதும் வைக்கப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் அவதூறானவை என்பது வினோத் ராய் சமர்பித்துள்ள இந்த பிரமாணப் பத்திரம் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது என காங்கிரஸ் பொதுச்செயலாளரும், தலைமை செய்தித்தொடர்பாளருமான ரன்தீப் சுர்ஜீவாலா தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஆர்யன் கான் கைது முதல் ஜாமீன்வரை: கடந்து வந்த பாதை!

ABOUT THE AUTHOR

...view details