தமிழ்நாடு

tamil nadu

Durg-Puri Express: ஒடிசாவில் மீண்டும் ரயில் விபத்து.. துர்க் - புரி எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி பெட்டியில் தீ விபத்து

By

Published : Jun 9, 2023, 8:12 AM IST

ஒடிசாவின் காரியர் சாலை ரயில் நிலையத்தில் இருந்த துர்க் - புரி எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Durg-Puri Express: ஒடிசாவில் மீண்டும் ரயில் விபத்து.. துர்க் - புரி எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி பெட்டியில் தீ விபத்து
Durg-Puri Express: ஒடிசாவில் மீண்டும் ரயில் விபத்து.. துர்க் - புரி எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி பெட்டியில் தீ விபத்து

நுபாடா (ஒடிசா): ஒடிசா மாநிலத்தின் நுபாடா மாவட்டத்தில் காரியார் சாலை ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில், நேற்று (ஜூன் 8) இரவு துர்க் - புரி விரைவு ரயில் வந்தது. அப்போது ரயிலில் இருந்த ஏசி பெட்டியில் இருந்து புகை வந்துள்ளது. இதனை உணர்ந்த பயணிகள், உடனடியாக ரயில்வே நிர்வாகத்திற்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே பணியாளர்கள் தீ அணைப்பான்களை வைத்து தீயை அணைத்துள்ளனர்.

மேலும், இது குறித்து கிழக்கு கடற்கரை ரயில்வே தரப்பில், “நேற்று இரவு சத்தீஸ்கர் மாநிலம் துர்க் ரயில் நிலையத்தில் இருந்து ஒடிசாவின் புரி ரயில் நிலையம் நோக்கி துர்க் - புரி விரைவு ரயில் வந்து கொண்டிருந்தது. இந்த ரயில் ஒடிசாவின் காரியார் சாலை ரயில் நிலையத்துக்கு நேற்று இரவு 10.10 மணிக்கு வந்தது.

ரயில் நின்ற சில நிமிடங்களில், ரயிலில் இருந்த பி3 என்ற ஏசி பெட்டியில் இருந்து புகை வந்துள்ளது. இதனை அறிந்த பயணிகள், உடனடியாக ரயில்வே நிர்வாகத்திற்கு தகவல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து, ரயில் நிலையத்தில் இருந்த தீ அணைப்பான்களைக் கொண்டு தீ அணைக்கப்பட்டது.

பிரேக் பேடுகளில் ஏற்பட்ட உராய்வால் தீ ஏற்பட்டுள்ளது. பின்னர், பிரேக் பேடில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டது. இதில் எந்த வித சேதமும் ஏற்படவில்லை. அதேநேரம், ரயில்வே பொறியியல் துறையினர், பழுதடைந்த பிரேக் பேடை சரி செய்தனர். இதனையடுத்து, 1 மணி நேரம் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு பணிகளை அடுத்து, ரயில் இரவு 11 மணிக்கு தனது பயணத்தைத் தொடர்ந்தது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ரயில் பெட்டியில் இருந்து புகை வருவதை உணர்ந்த பயணிகள், உடனடியாக ரயிலில் இருந்து கீழே இறங்கி உள்ளனர். இதனால் சிறிது நேரத்திற்கு அந்த இடத்தில் பதட்டம் நிலவியது. மேலும், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே, கடந்த ஜூன் 2ஆம் தேதி மாலை ஹவுரா அதிவிரைவு ரயில், மேற்குவங்க மாநிலத்தின் ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில் மோதிய கோர விபத்து உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது.

இந்த பயங்கர விபத்தில் 275 பேர் உயிரிழந்ததாகவும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் தென்கிழக்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த விபத்தில் சிக்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகள் உள்பட பலரும் சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு வந்தடைந்தனர்.

இதையும் படிங்க:ஒடிசா ரயில் விபத்து குறித்து அவதூறு; கன்னியாகுமரியில் பாஜக உறுப்பினர் கைது

ABOUT THE AUTHOR

...view details