தமிழ்நாடு

tamil nadu

என்டிஆர் நினைவு 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார் திரெளபதி முர்மு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 28, 2023, 4:45 PM IST

Droupadi Murmu released Rs 100 NTR commemorative coin: பழம்பெரும் நடிகர் என்டிஆரின் நூற்றாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி, என்டிஆர் உருவம் பதிக்கப்பட்ட 100 ரூபாய் இந்திய நாணயத்தை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வெளியிட்டார்.

Etv Bharat
Etv Bharat

டெல்லி:பழம்பெரும் தெலுங்கு நடிகர் நந்தாமுரி டரகரா ராமா ராவ் என்ற என்டிஆர் (NTR)-இன் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தை ஒட்டி, மத்திய அரசு சார்பில் அவரைக் கவுரவிக்கும் பொருட்டு, என்டிஆர் உருவம் பதித்த 100 ரூபாய் நாணயம் இன்று வெளியிடப்பட்டது. டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள கலாச்சார மையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு என்டிஆர் உருவம் பதித்த 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார்.

இதனையடுத்து நிகழ்வில் உரையாற்றிய திரெளபதி முர்மு, “இந்திய சினிமாவில் நந்தமுரி டரகரா ராமா ராவ் (NTR) மிகவும் தனித்துவம் வாய்ந்தவர். என்டிஆர் ஏற்று நடித்த கிருஷ்ணா மற்றும் ராமர் ஆகிய கடவுள்களின் கதாபாத்திரங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அவர் சமூக நீதிக்காக உழைத்தவர். என்டிஆரின் தனித்துவமான ஆளுமையை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட மாட்டார்கள்” என தெரிவித்தார்.

இதனையடுத்து பேசிய என்டிஆரின் மகளும், ஆந்திர பாஜகவின் தலைவருமான புரண்டேஸ்வரி பேசுகையில், “பெண்களுக்கு சொத்துரிமையை வழங்கினார் ,என்டிஆர். ஆந்திராவின் திருப்பதியில் உள்ள பெண்கள் பல்கலைக்கழகத்தை விரிவுபடுத்தினார். என்டிஆர், ஒரு தலைமுறைக்கான நடிகர் மட்டுமல்ல. அனைத்து தலைமுறைகளுக்கும் ஒரு தனித்துவமான நடிகராக விளங்குகிறார். அவர் சினிமா மற்றும் அரசியல் ஆகிய துறைகளில் தனி முத்திரை பதித்தவர்” என கூறினார்.

இந்த நிகழ்வில் பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் என் சந்திரபாபு நாயுடு, முன்னாள் அமைச்சர் டகுபதி வெங்கடேஸ்வர ராவ், என்டிஆரின் மகன்கள் நந்தாமுரி பாலகிருஷ்ணா, மோகன கிருஷ்ணா, ராமகிருஷ்ணா, மகள்கள் புரண்டேஸ்வரி, புவனேஷ்வரி மற்றும் என்டிஆரின் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், எம்பிக்கள் கனகமேடலா ரவீந்திர குமார், கிஞ்சரப்பு ராம் மோகன் நாயுடு, கல்லா ஜெயதேவ், கேஷினேனி நானி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பி ரகுராமகிருஷ்ணா ராஜூ, பாஜக எம்பி சிஎம் ரமேஷ், முன்னாள் எம்பிக்கள் சுஜானா சவுத்ரி, கம்பாம்பாடி ராம்மோகன் ராவ் உள்பட என்டிஆர் உடன் சினிமா மற்றும் அரசியலில் நெருக்கம் உடையவர்களும் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:Allu arjun latest news: புஷ்பாவுக்கு ஸ்வீட் ஊட்டும் மெகா ஸ்டார்..!

ABOUT THE AUTHOR

...view details