தமிழ்நாடு

tamil nadu

சென்னை தம்பதியை கொன்றுவிட்டு ஆந்திரா போலீசிடம் சிக்கிய கொலையாளிகள்... பின்னணி என்ன?

By

Published : May 8, 2022, 2:59 PM IST

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ஆடிட்டர் மற்றும் அவரது மனைவியை, அவர்களது கார் ஓட்டுநர் கொலை செய்துவிட்டு தப்ப முயன்றபோது, தமிழ்நாடு போலீசாரின் தகவலின்பேரில் தங்குதூர் சுங்கச்சாவடி அருகே ஆந்திரா போலீசார் கொலையாளியான கார் ஓட்டுநர், ஓட்டுநரின் நண்பரை மடக்கிப் பிடித்து கைதுசெய்தனர்.

ஆந்திரா போலீசாரிடம் சிக்கிய கொலையாளிகள்
ஆந்திரா போலீசாரிடம் சிக்கிய கொலையாளிகள்

ஓங்கோல்: சென்னை மயிலாப்பூர் துவாரகா மகாலட்சுமி தெருவைச் சேர்ந்தவர் ஆடிட்டர் ஸ்ரீகாந்த் (60). இவரது மனைவி அனுராதா (55). இவர்கள் இருவரும் அமெரிக்காவில் வசிக்கும் தனது மகள் சுனந்தாவின் பிரசவத்திற்காக சென்றுவிட்டு நேற்று (மே7) சனிக்கிழமை காலை 3.30 மணியளவில் விமானம் மூலமாக சென்னை திரும்பியுள்ளனர்.

சென்னைக்கு திரும்பிய தம்பதியினரை அவர்களது கார் ஓட்டுநரான நேபாளத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் காரில் ஏற்றிக்கொண்டு மயிலாப்பூரில் உள்ள தம்பதியின் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில், மகள் சுனந்தா வீட்டிற்கு திரும்பிய பெற்றோரை செல்போனில் தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆஃப் என வந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த சுனந்தா, தனது உறவினரான அடையாறு இந்திரா நகரில் வசிக்கும் திவ்யாவிற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

ஆந்திரா போலீசாரிடம் சிக்கிய கொலையாளிகள்

இதையடுத்து, திவ்யா தனது கணவர் ரமேஷ் உடன் சென்று பார்த்தபோது வீடு பூட்டப்பட்டிருந்தது. பூட்டை உடைத்து பார்த்தபோது தம்பதி அங்கு இல்லை மேலும் வீட்டில் இருந்த பொருள்கள் கலைக்கப்பட்டிருந்துள்ளன. இதனால் மேலும் சந்தேகமடைந்த அவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். மயிலாப்பூர் துணை ஆணையர் கவுதமன் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், விமான நிலையத்தில் இருந்து தம்பதியை ஓட்டுநர் அழைத்து சென்று உறுதியானது.

ஜிபிஎஸ்யை வைத்து பிடித்த காவல்துறை: இதையடுத்து, காரின் ஜிபிஎஸ்-ஐ வைத்து கார் ஓட்டுநரான கிருஷ்ணாவை தீவிரமாக தேடி வந்தனர். இதில் ஓட்டுநர் கிருஷ்ணா சென்னையைத் தாண்டி ஆந்திரா பகுதியில் சென்று கொண்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக சென்னை காவல்துறையினர், ஜிபிஎஸ் வைத்து, ஆந்திராவின் பிரகாசம் மாவட்ட காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

பிரகாசம் எஸ்பி மலிகா கர்க் உத்தரவின் பேரில், காவல்துறையினர் ஓட்டுநர் கிருஷ்ணாவை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று (மே7) மாலை 6 மணியளவில், ஓங்கோல் டிஎஸ்பி நாகராஜு, தங்குதூர், நெடுஞ்சாலை காவல்துறையினர் தங்குதூர் சுங்கச்சாவடி அருகே ஓட்டுநர் கிருஷ்ணா, அவரது நண்பர் ஆகியோரை மடக்கிப் பிடித்து, காவல் நிலையம் அழைத்து வந்தனர். பின்னர் ஓட்டுநர் கிருஷ்ணா, அவரது நண்பர் ஆகியோரை தமிழ்நாடு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதைத்தொடர்ந்து, மயிலாப்பூர் காவல்துறையினர் கார் ஓட்டுநர் கிருஷ்ணாவிடம் மேற்கொண்ட விசாரணையில், நேற்று வீட்டில் வைத்து ஸ்ரீகாந்த் மற்றும் அனுராதா ஆகிய இருவரையும் கொலை செய்து ஈசிஆர் நெமிலிச்சேரி பகுதியில் உள்ள அவர்களின் பண்ணை வீட்டில் புதைத்து விட்டு, பீரோவில் இருந்த சுமார் 20 லட்சம் ரூபாய் பணத்தையும், 50 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி நகைகளையும் அவரது நண்பரின் உதவியுடன் கொள்ளை அடித்தது தெரியவந்தது. தப்ப முயன்றபோது, காவல்துறையினரிடம் பிடிபட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, கார் ஓட்டுநர் கிருஷ்ணா, அவரது நண்பர் இருவரையும் கைது செய்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பணத்திற்காக தம்பதியை கொன்று பண்ணை வீட்டில் புதைத்த நேபாள கார் ஓட்டுநர்!

ABOUT THE AUTHOR

...view details