தமிழ்நாடு

tamil nadu

'இந்து' என்ற சொல் குறித்த சர்ச்சை கருத்தை திரும்பப்பெற்றார் சதீஷ் ஜார்கிஹோலி!

By

Published : Nov 10, 2022, 3:29 PM IST

இந்து என்ற சொல் குறித்த தனது கருத்தை சிலர் தவறாக பிரசாரம் செய்வதால், பொதுமக்களிடையே குழப்பம் ஏற்பட வேண்டாம் என்பதற்காக, கருத்தை திரும்பப்பெறுவதாக காங்கிரஸ் எம்எல்ஏ சதீஷ் ஜார்கிஹோலி தெரிவித்துள்ளார்.

Congress
Congress

பெலாகவி: கர்நாடகாவில் கடந்த 6ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கர்நாடக காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவரும், காங்கிரஸ் எம்எல்ஏவுமான சதீஷ் ஜார்கிஹோலி, இந்து என்ற சொல் பாரசீகத்திலிருந்து வந்தது என்றும், அது ஆபாசமான பொருள் கொண்டது என்றும் தெரிவித்தார். இந்தியாவுக்கு தொடர்பில்லாத இந்து என்ற சொல், நம் மீது திணிக்கப்படுகிறது என்றும் தெரிவித்திருந்தார்.

சதீஷ் ஜார்கிஹோலியின் இந்தப் பேச்சுக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதேபோல், ஜார்கிஹோலியின் கருத்துக்கு காங்கிரஸ் கட்சியும் ஆட்சேபனை தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இந்து என்ற சொல் குறித்த தனது கருத்தை திரும்பப்பெறுவதாக காங்கிரஸ் எம்எல்ஏ சதீஷ் ஜார்கிஹோலி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், "நவம்பர் 6ஆம் தேதி நிப்பானியில் நடந்த பேரணியில், இந்து என்ற சொல் பாரசீக வம்சாவளியைச் சேர்ந்தது என்று கூறியிருந்தேன். அது எப்படி இந்தியாவில் நுழைந்தது? என்பன போன்ற கேள்விகளை எழுப்பினேன்.

பல எழுத்தாளர்களின் கட்டுரைகளில், இந்த சொல் மிகவும் மோசமான அர்த்தம் கொண்டிருக்கிறது. அதனால், இந்த விவகாரத்தில் விவாதம் தேவை என்று நான் கூறினேன். எனது கருத்துகள் விக்கிபீடியாவில் உள்ள கட்டுரைகள், அகராதிகள் மற்றும் வரலாற்றாசிரியர்களின் எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டவை.

ஆனால், சிலர் என்னை இந்து விரோதியாக சித்தரிக்க முயல்கின்றனர். எனக்கு அவப்பெயரை ஏற்படுத்தவும், எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவும் திட்டமிட்ட சதி நடக்கிறது. இதுதொடர்பாக பொதுமக்கள் மனதில் குழப்பம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக எனது கருத்துகளை திரும்ப பெற்றுக் கொள்கிறேன். எனது கருத்துகளால் யாரேனும் புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:'இந்து' என்ற சொல் குறித்த சர்ச்சை பேச்சு - காங்., எம்எல்ஏவுக்கு பாஜகவினர் கண்டனம்!

ABOUT THE AUTHOR

...view details