தமிழ்நாடு

tamil nadu

தெலங்கானா முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி தேர்வு! எப்போ பதவியேற்பு தெரியுமா?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 5, 2023, 6:59 PM IST

தெலங்கானா மாநிலத்தின் முதலமைச்சராக ரேவந்த் ரெட்டியை தேர்வு செய்து காங்கிரஸ் மேலிடம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. டிசம்பர் 7ஆம் தேதி அவர் பதவியேற்றுக் கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Etv Bharat
Etv Bharat

ஐதரபாத் :தெலங்கானா முதலமைச்சராக ரேவந்த் ரெட்டியை தேர்வு செய்து காங்கிரஸ் மேலிடம் அறிவித்து உள்ளது. வரும் டிசம்பர் 7ஆம் தேதி முதலமைச்சராக அவர் பதவியேற்றுக் கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

119 தொகுதிகளை கொண்ட தெலங்கானா மாநிலத்திற்கு கடந்த நவம்பர் 30ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. தொடர்ந்து கடந்த டிசம்பர் 3ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், ஏறத்தாழ 10 ஆண்டுகள் தெலங்கானாவில் ஆட்சியில் இருந்த கே. சந்திரசேகர ராவ் தலைமையிலான பி.ஆர்.எஸ் கட்சியை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது.

மாநிலத்தில் ஆட்சி அமைக்க 60 தொகுதிகள் தேவைப்பட்ட நிலையில், காங்கிரஸ் 64 இடங்களை கைப்பற்றி அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து முதலமைச்சர் வேட்பாளரை தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. தெலங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் முதலமைச்சர் வேட்பாளர் பட்டியலில் இருந்தனர்.

அதேபோல், பாட்டி விக்ரமர்க மல்லு, உத்தம் குமார் ரெட்டி, ஸ்ரீதர் பாபு ஆகியோரும் முதலமைச்சர் ரேசில் இருந்தனர். முதலமைச்சரை தேர்வு செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்த நிலையில், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், தெலங்கானா காங்கிரஸ் பொறுப்பாளர் மாணிக்கம் தாக்ரே உள்ளிட்டோர் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து ஆலோசனை நடத்த டெல்லி சென்றனர்.

தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், ரேவந்த் ரெட்டி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். வரும் டிசம்பர் 7ஆம் தேதி முதலமைச்சராக அவர் பதவியேற்றுக் கொள்வார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக தெலங்கானா முதலமைச்சரை தேர்வு செய்யும் உயர்மட்டக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ரேவந்த் ரெட்டியை தேர்வு செய்யுமாறு பரிந்துரைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி? ராகுல் காந்தி தேர்வு என்ன?

ABOUT THE AUTHOR

...view details