தமிழ்நாடு

tamil nadu

எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம்... காங்கிரஸ் என்ன திட்டம்?

By

Published : Jun 1, 2023, 7:25 PM IST

ஜூன் 12 ஆம் தேதி அனைத்து எதிர்க் கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கலந்து கொள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்து உள்ளார்.

Jairam Ramesh
Jairam Ramesh

டெல்லி : பீகார் தலைநகர் பாட்னாவில் ஜூன் 12ஆம் தேதி நடைபெறும் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கலந்து கொள்ள உள்ளதாக அக்கட்சியின் தேசிய தகவல் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்து உள்ளார். மேலும், அந்த கூட்டத்தில் யார் கலந்து கொள்ள போகிறார் என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒரு வரிசையில் கொண்டு வரும் பணியில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார்.

அதற்காக, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பஞ்சாப் முதலமைச்சர் பக்வந்த் மான், மகாராஷ்டிராவில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

இந்நிலையில், வரும் ஜூன் 12ஆம் தேதி எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக, இடது சாரிகள், பீகார் ராஷ்டிரிய ஜனதா தளம், டெல்லி ஆம் ஆத்மி, மகாராஷ்டிராவின் தேசியவாத காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்பதாக அறிவித்து உள்ளன.

மேலும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக அறிவித்து உள்ளார். இந்நிலையில், பாட்னா எதிர்க்கட்சிகளின் மகா ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியும் கலந்து கொள்ள உள்ளதாக அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், "ஜூன் 12ஆம் தேதி பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்டாயம் கலந்து கொள்ளும். ஆனால் யார் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறித்து முடிவு செய்யப்படவில்லை. அதுகுறித்து விரைவில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும்" என்றார்.

முன்னதாக எதிர்க்கட்சிகள் மாநாட்டில் காங்கிரஸ் கட்டாயம் கலந்து கொள்ளும் என மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்து இருந்தார். டெல்லி அவசரச் சட்ட விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சியை ஆதரிக்கப் போவதில்லை என்றும், ஆம் ஆத்மி மற்றும் தெலங்கானா முதலமைச்சர் கே.சி.ஆரின் பி.ஆர்.எஸ் கட்சி மீதும் நம்பிக்கை இல்லை என காங்கிரஸ் மேலிடம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால், கே.சி.ஆர் ஆகியோருக்கு மத்தியில் காங்கிரஸ் பிரதிநிதியை அமர வைப்பது என்பது நிதிஷ் குமாருக்கு பெரும் தலைவலியாக இருக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க :இந்தியா - நேபாளம் இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து - சரக்கு ரயில் போக்குவரத்து துவக்கம்!

ABOUT THE AUTHOR

...view details