தமிழ்நாடு

tamil nadu

காங்கிரஸ் கட்சிக்கு தைரியம் இருந்தால் என் மீது வழக்கு போடட்டும் - குஷ்பு ஆவேசம்

By

Published : Mar 25, 2023, 8:21 PM IST

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு 5 ஆண்டுகளுக்கு முன்பு, மோடி குறித்து பதிவிட்ட ட்வீட்டை காங்கிரஸ் கட்சியினர் வைரலாக்கிவரும் நிலையில், குஷ்பு அதற்கு பதிலளித்துள்ளார்.

Khushbu
Khushbu

டெல்லி:நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பு தற்போது பாஜகவில் உள்ளார். அதோடு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகவும் பதவி வகித்து வருகிறார். முன்னதாக அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்தார். அந்த வகையில், 2018ஆம் அவர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ட்வீட் செய்திருந்தார. இந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது, மோடி குறித்து கருத்து தெரிவித்த ராகுல் காந்தியின் பதவி பறிக்கப்பட்டது போல, பாஜகவில் இருக்கும் குஷ்புவின் பதவியும் பறிக்கப்படுமா என்று காங்கிரஸ் கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதற்கு நடிகை குஷ்பு பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், "காங்கிரஸ் கட்சியில் இருந்த நான், காங்கிரஸின் செய்தித் தொடர்பாளராக மட்டுமே எனது கடமையைச் செய்து வந்தேன். இது என்னுடைய மொழியல்ல. அப்போதைய காங்கிரஸ் கட்சியின் மொழியாகும். எல்லா மோடிகளையும் திருடர்கள் என்று சொல்லும் அளவிற்கு ராகுல் காந்தி தரம் தாழ்ந்து விட்டார். ஆனால், நான் மோடிகள் உடன் ஊழல் என்ற வார்த்தையை மட்டுமே ஒப்பிட்டேன். அதை காங்கிரஸ் கட்சியால் புரிந்து கொள்ள முடியவில்லை.

தைரியம் இருந்தால் என் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு காங்கிரஸ் தலைவர்களுக்கு நான் சவால் விடுகிறேன். நான் அவர்களை சட்டரீதியாக எதிர்கொள்வேன்" எனத் தெரிவித்தார். இதையடுத்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "எனது ட்வீட்டை நான் நீக்கப்போவது கிடையாது. இதுபோல பல ட்வீட்கள் உள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு வேறு வேலையில்லையென்றால், இன்னும் சில ட்வீட்களை கண்டுபிடிக்க உங்கள் நேரத்தைப் பயன்படுத்துங்கள்.

என்னையும், ராகுல் காந்தியையும் ஒரு விவகாரத்தில் காங்கிரஸ் எப்படி ஒப்பிட்டு பார்க்கிறது என்பதை காண விரும்புகிறேன். நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் என்று கூறிக்கொள்ளும் அவருக்கு இணையாக பெயரையும், மரியாதையையும் நான் சம்பாதித்திருக்கிறேன் என்ற உண்மையை மதிக்கிறேன். காங்கிரஸ் கட்சிக்கு நன்றி" எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:மோடி குறித்து 5 ஆண்டுகளுக்கு முன்பு குஷ்பு போட்ட ட்வீட்.. ராகுலுக்கு அடுத்து இவருக்கும் சிக்கலா.?

ABOUT THE AUTHOR

...view details