தமிழ்நாடு

tamil nadu

மீண்டும் குறைந்த சிலிண்டர் விலை..! உஜ்வாலா பயனாளிகளுக்கு தித்திப்பான அறிவிப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 4, 2023, 4:23 PM IST

Updated : Oct 4, 2023, 5:16 PM IST

Cylinder price Reduced: உஜ்வாலா திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பயன்படுத்தும் சமையல் எரிவாயு உருளையின் விலையை மத்திய அரசு மேலும் ரூ.100 குறைத்துள்ளது.

central government reduced Ujjwala Cylinder price  100 rupees
சிலிண்டர் விலை

டெல்லி:உஜ்வாலா திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை மத்திய அரசு மேலும் குறைத்து உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 29-ஆம் தேதி ரக்‌ஷா பந்தன் மற்றும் ஓணம் பரிசாக சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்படுவதாக செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்து இருந்தார். அதனையடுத்து டெல்லியில் ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் 1,103 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த வீட்டு உபயோக சிலிண்டர் 903 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், உஜ்வாலா திட்டத்தின் உள்ள பயனாளிகளுக்கு சிலிண்டர் 703 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இதனையடுத்து, செப்டம்பர் 1-ஆம் தேதி வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையும் குறைக்கப்பட்டது. ரூ.1852.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வணிக பயன்பாட்டு சிலிண்டர் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் ரூ.157 குறைக்கப்பட்டு ரூ.1695-க்கு விற்பனை செய்யப்படு வந்தது. இந்நிலையில், மீண்டும் கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி வணிக பயன்பாட்டு சிலிண்டர் ரூ.203 விலை உயர்த்தப்பட்டது.

வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைக்கப்பட்டு மீண்டும் உயர்த்தப்பட்ட நிலையில், வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை மாற்றம் இன்றி இருந்து வந்தது. இந்நிலையில் இன்று (அக்.04) முதல் பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் பயனாளிகளாக உள்ளவர்களுக்கு சிலிண்டர் விலை மேலும் ரூ.100 குறைந்துள்ளது. அதாவது உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு அரசு வழங்கும் மானியத்தை ரூ.200இல் இருந்து ரூ.300 ஆக அதிகரித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் 10.35 கோடி உஜ்வாலா திட்ட பயனாளிகள் மேலும் பயனடைவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை பெண்களுக்கு இலவசமாக வீட்டு உபயோக சிலிண்டர் வழங்கும் நோக்கில் பிரதம மந்திரியின் உஜ்வாலா யோஜனா திட்டம் 2016-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. 9.6 கோடி பயனாளிகள் இந்த திட்டத்தில் பயன்பெற்று வந்த நிலையில் சமீபத்தில் மேலும் பயனாளிகளை இந்த திட்டத்தில் இணைப்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது.

மேலும், பிரதம மந்திரியின் உஜ்வாலா யோஜனா திட்டத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பதற்காகவும், மேலும் 75 லட்சம் பயனாளிகளை இணைப்பதற்காகவும் ரூ.1,650 கோடியை விடுவிப்பதற்கான ஒப்புதலையும் மத்திய அரசு வழங்கி உள்ளது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சிலிண்டர் விலை குறைக்கப்படுவதன் மூலம் 10.35 கோடி பயனாளிகள் உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயனடைவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பயன்படுத்தும் சிலிண்டர் விலையை மத்திய அரசு சமீப காலமாக தொடர்ந்து குறைத்து வருகிறது. வருகின்ற 5 மாநில சட்டசபை தேர்தலையும், நாடாளுமன்ற தேர்தலையும் கவனத்தில் கொண்டே மத்திய அரசு தொடர்ந்து இதுபோல் சிலிண்டர் விலை குறைப்பில் ஈடுபட்டு வருவதாக, அரசின் நடவடிக்கையை எதிர்கட்சிகள் விமர்சித்தும் வருகின்றனர்.

இதையும் படிங்க: அக்.12-இல் கூடுகிறது காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம்!

Last Updated :Oct 4, 2023, 5:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details