தமிழ்நாடு

tamil nadu

"தமிழ்நாட்டின் ஏஜென்டாக கர்நாடக காங்கிரஸ் அரசு செயல்படுகிறது" - எடியூரப்பா குற்றச்சாட்டு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 23, 2023, 10:30 PM IST

Cauvery water issue: கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சியைக் கண்டித்து பாஜகவினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா, கர்நாடக காங்கிரஸ் அரசு தமிழ்நாட்டின் ஏஜென்டாக செயல்படுவதாக விமர்சித்துள்ளார்.

Cauvery water issue congress leaders acting as agents of tamil nadu b s yediyurappa
தமிழகத்தின் ஏஜென்டாக கர்நாடக காங்கிரஸ் அரசு செயல்படுகிறது - எடியூரப்பா

பெங்களூரு: காவிரி நதிநீர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் மாநில அரசின் தோல்வியைக் கண்டித்து பெங்களூரு, மைசூர் வங்கி வட்டத்தில் பாஜக சார்பில் இன்று (செப்.23) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா, “இது மக்கள் விரோத, விவசாயி விரோத அரசுக்கு கண்டனம். தமிழகத்தின் ஏஜெண்டாக காங்கிரஸ் கட்சி நடந்து கொண்டது. தமிழகம் கேட்கும் முன் தண்ணீரை விடுவித்து எங்களை சிக்கலில் ஆழ்த்தினார்கள். நிபுணர்கள் வந்து உண்மை நிலையை அறிய வேண்டும்.

தமிழகத்தை திருப்திபடுத்த டி.கே.சிவக்குமார் இப்படி செய்கிறார். திறமை இருந்தால் திருத்தவும். இல்லாவிட்டால் ராஜினாமா செய்துவிட்டு வீட்டுக்குப் போங்கள். ஆட்சியில் தொடர உங்களுக்கு தார்மீக உரிமை இல்லை. ஒரு சொட்டு தண்ணீர் கூட விடக்கூடாது. உச்ச நீதிமன்றத்தை சமாதானப்படுத்த வேண்டும். முன்னாள் பிரதமர் எச்.டி.தேவேகவுடாவும், முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியும் இதையே சொன்னார்கள்” எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து பேசிய முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, “கர்நாடகாவில் இருண்ட ஆட்சி நடக்கிறது. மக்களுக்கு முறையாக தண்ணீர் வழங்கும் திறன் காங்கிரஸ் அரசிடம் இல்லை. முறையான மின்சாரம் வழங்கும் திறன் காங்கிரஸ் அரசிடம் இல்லை. மாநிலத்தில் வளர்ச்சி முற்றிலும் வீழ்ச்சியடைந்துள்ளது. மாநிலத்தை அடுத்த கட்டத்திற்கு பின்னோக்கிக் கொண்டு செல்கிறார்கள். கர்நாடகாவின் மண்ணையும், நீரையும் காக்க சித்தராமையா தலைமையிலான அரசு முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது.

காவிரி விவகாரத்தில் ஆரம்பத்திலிருந்தே இந்த அரசு அலட்சியம் காட்டி வருகிறது. எந்த அர்ப்பணிப்பும் இல்லாமல் பணியாற்றினார்கள். இதனால் வரும் நாட்களில் காவிரிப் படுகையில் உள்ள மக்களுக்கு பெரும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். இதற்கு அரசே நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டும்.

முதல் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (Cauvery Water Management Authority) கூட்டத்தில், எங்கள் அதிகாரிகள் பேசவில்லை. அவர்கள் உத்தரவிடுவதற்கு முன்பே காங்கிரஸ் அரசு தண்ணீரை திறந்து விட்டது. தமிழகம் தண்ணீரை சட்ட விரோதமாக பயன்படுத்துகிறது. 32 டிஎம்சி தண்ணீர் பயன்படுத்தப்பட இருந்தது. ஆனால் 65 டிஎம்சி தண்ணீரை பயன்படுத்தியுள்ளனர். தமிழக விவசாயிகளின் நலன் காக்கவே நமது நீர்ப்பாசன அமைச்சரின் அறிக்கை உள்ளது. இது போன்ற பொறுப்பற்ற அரசை கர்நாடக வரலாற்றில் பார்த்ததில்லை. சுப்ரீம் கோர்ட்டில் கூட சரியாக வாதம் செய்யப்படவில்லை” என விமர்சித்தார்.

காவிரி நதிநீர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் மாநில அரசின் தோல்வியைக் கண்டித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதலமைச்சர்கள் பசவராஜ் பொம்மை, எடியூரப்பா உள்பட பாஜகவின் மாநகர், மாவட்டத் தலைவர்கள், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் காவிரி நீர் மேலாண்மையில் ஏற்பட்டுள்ள தோல்வியைக் கண்டித்து பாஜகவினர் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட முயன்ற பாஜகவினரை போலீசார் கைது செய்தனர். முன்னாள் முதலமைச்சர்கள் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை, முன்னாள் அமைச்சர் கோவிந்த காரஜோலா, சி.என்.அஸ்வத் நாராயண், கோபாலையா உள்ளிட்டவர்களை போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். ஆளும் கட்சியைக் கண்டித்து பாஜகவைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சர்கள் நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

இதையும் படிங்க: புதிய நாடாளுமன்றத்தை ‘மோடி மல்டிபிளக்ஸ்’ என விமர்சித்த காங்கிரஸ் - பாஜக பதிலடி!

ABOUT THE AUTHOR

...view details