தமிழ்நாடு

tamil nadu

மேற்கு வங்கத்தில் வெடிகுண்டு என தெரியாமல் விளையாடிய சிறுவன் உயிரிழப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 5, 2024, 12:51 PM IST

West Bengal: மேற்கு வங்கத்தில் உள்ள பள்ளி ஒன்றில் விளையாட்டுப் பொருள் என நினைத்து வெடிகுண்டை சுவரில் வீசி விளையாடிய 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Boy dies after playing with bomb in West Bengal
மேற்கு வங்கத்தில் வெடிகுண்டு என தெரியாமல் விளையாடிய சிறுவன் பலி

தௌலதாபாத் (முர்ஷிதாபாத்):மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் உள்ள பள்ளி ஒன்றில், விளையாட்டுப் பொருள் என நினைத்து, வெடிகுண்டை சுவரில் வீசி விளையாடிய சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெடி விபத்தில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டம் தௌலதாபாத்தில் உள்ள சோயதங்கா என்னும் கிராமத்தில், ஆரம்பப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் முகலேசூர் ரஹ்மான் (7) என்னும் சிறுவன் 2ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் நேற்று (ஜன.04) வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற நிலையில், மதிய உணவு இடைவேளையின்போது, தனது நண்பர்களுடன் பள்ளி மைதானத்தில் விளையாடிக் கொண்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது சிறுவன் முகலேசூர், பந்து போன்ற பொருள் ஒன்றை கண்டுள்ளார். அதை விளையாட்டுப் பொருள் என நினைத்து கையில் எடுத்த முகலேசூர், அது வெடிகுண்டு என அறியாமல் சுவரில் வீசி எறிந்துள்ளார். இதைத் தொடர்ந்து, சுவரில் பட்ட வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து, பெரும் விபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த விபத்தில் சிறுவன் முகலேசூர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு அருகில் இருந்த பலருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வெடிகுண்டின் சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அப்பகுதியினர், உயிரிழந்த நிலையில் கிடந்த சிறுவன் மற்றும் உயிருக்குப் போராடிய நிலையில் இருந்த மாணவர்களைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார், சிறுவனின் உடலை மீட்டு, முக்‌ஷிதாபாத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கு சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் முகலேசூர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். தற்போது விபத்தில் காயமடைந்த மாணவர்களுக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தௌலதாபாத் போலீசார் தற்போது சம்பவம் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த அன்சார் ஷேக் கூறுகையில், “பயங்கர வெடி சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தோம். அங்கு நிகழ்ந்திருந்த சம்பவம் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. பள்ளி அருகே வெடிகொண்டு இருந்ததை மன்னிக்கவே முடியாது” எனக் கூறியுள்ளார். இந்நிலையில், பள்ளி அருகே கிடந்த வெடிகுண்டால் நிகழ்ந்த விபரீதம், அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:தருமபுரி அருகே நில அளவீடு பிரச்சனையில் போலீஸ் மீது சாணத்தை ஊற்றிய பெண் கைது!

ABOUT THE AUTHOR

...view details