தமிழ்நாடு

tamil nadu

ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற இளைஞர் மீது துப்பாக்கிச்சூடு!

By

Published : Mar 29, 2023, 10:46 PM IST

பீகாரில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Gun shoot
இளைஞர் மீது துப்பாக்கிச்சூடு

ஜெகனாபாத்: பீகார் மாநிலம், நாளந்தா மாவட்டம், கொர்து கிராமத்தைச் சேர்ந்தவர், சுதிர் (23). அங்குள்ள கல்லூரியில் பி.ஏ 2ம் ஆண்டு படித்து வரும் சுதிருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, இவர் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில், கடந்த செவ்வாய்க்கிழமை அருகே உள்ள ஊருக்குச் சென்ற சுதிர், இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அனந்தபூர் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற சுதிரிடம், ஓட்டுநர் உரிமம் இல்லாதது தெரியவந்துள்ளது. போலீசார் இருசக்கர வாகனத்தை நிறுத்த முயன்ற போது அவர், நிறுத்தாமல் சென்றுள்ளார். இதையடுத்து காவலர்கள் சிலர், சினிமாவைப்போல் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் சுதிரை துரத்தியுள்ளனர். போலீசார் பலமுறை எச்சரித்தும் இருசக்கர வாகனத்தை அவர் நிறுத்தவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த ஏஎஸ்ஐ மும்தாஸ் அகமது துப்பாக்கியால் சுட்டதில், சுதிர் காயம் அடைந்தார். எனினும் காயத்துடன் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் இருசக்கர வாகனத்தை ஓட்டிய அவர், தனது ஊரின் அருகே சென்று கீழே விழுந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பொதுமக்கள் சுதிரை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசாரின் இக்கொடூர தாக்குதலுக்கு சுதிரின் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதற்குக் காரணமான காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இந்நிலையில் சுதிரை துப்பாக்கியால் சுட்ட ஏஎஸ்ஐ மும்தாஸ் அகமது கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் வாகன சோதனை பணியில் இருந்த ஏஎஸ்ஐ உட்பட காவலர்கள் 7 பேர் கூண்டோடு பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இதுகுறித்து சுதிரின் தந்தை ரபீந்திர யாதவ் கூறுகையில், "என் மகன் ஹெல்மெட் அணியாமல் சென்றுள்ளான். போலீசாரை கண்டதும் அச்சத்தில் அங்கிருந்து தப்பியுள்ளான். ஆனால், விடாமல் துரத்திச் சென்று காவல்துறையினர் என் மகன் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்" என்றார்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணை அறிக்கை வந்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட எஸ்.பி தீபக் ரஞ்சன் கூறியுள்ளார். ஹெல்மெட் அணியாமல் சென்ற இளைஞர் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 'இந்தியா வேகமாக வளரும் மிகப்பெரிய பொருளாதாரம்' - பிரதமர் மோடி

ABOUT THE AUTHOR

...view details