தமிழ்நாடு

tamil nadu

49 பேர் மீது தேச துரோக வழக்கு - பிரதமருக்கு கடிதம் எழுதிய சசி தரூர்

By

Published : Oct 8, 2019, 3:13 PM IST

டெல்லி: இயக்குநர் மணிரத்னம், வரலாற்று ஆசிரியர் ராமச்சந்திர குஹா உள்ளிட்ட 49 பேருக்கு எதிராக தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கடிதம் எழுதியுள்ளார்.

சசி தரூர்

நாட்டில் சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்டோர் உள்ளிட்டோருக்கு எதிராக கும்பல் வன்முறை அதிகரித்துள்ளது. எனவே, அதனை பிணையில் வெளிவர முடியாத குற்றமாக அறிவிக்கக் கோரி இயக்குநர்கள் மணிரத்னம், அனுராக் காஷ்யப், வரலாற்று ஆசிரியர் ராமச்சந்திர குஹா உள்ளிட்ட 49 பேர் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் சினிமா பிரபலங்களும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி.யான சசி தரூர் இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் அந்தக் கடிதத்தின் புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அவர், கருத்துச் சுதந்திரத்தில் நம்பிக்கை உள்ளோர் இதுபோன்ற கடிதத்தை பிரதமர் மோடிக்கு அனுப்பி இந்திய அரசியலமைப்பு பற்றியும், ஜனநாயகத்தில் எழும் எதிர்க்கருத்துக்களின் மதிப்பையும் அவருக்கு உணர்த்துங்கள். எத்தனை வழக்குகள் பதிவிட்டாலும் அதைச் செய்யுங்கள் எனக் குறிப்பிட்டிருந்தார்.

சசி தரூர் பிரதமருக்கு எழுதிய அந்தக் கடிதத்தில், "49 பேர் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. ஒரு இந்திய குடிமகனாக நாட்டில் உள்ள பிரச்னைகள் குறித்து எந்தவொரு அச்சமின்றி உங்களுக்கு கடிதம் எழுத உரிமை உள்ளதாக நம்புகிறேன். அதற்கு நீங்களும் ஆதரவு அளிப்பீர்கள் என நம்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் கருத்துச் சுதந்திரத்திற்கு அனுமதி உள்ளது என்பதை பற்றி வெளிப்படையாக மக்கள் முன்பு உறுதியளிக்குமாறு பிரதமர் மோடிக்கு வலியுறுத்தியுள்ளார்.

எதிர்க்கருத்து இல்லாமல் ஜனநாயகம் என்பது இருக்க முடியாது எனத் தெரிவித்துள்ள அவர், நம் நாடு பல மாறுபட்ட கருத்துகளையும் அதன் மீது மாறுபட்ட பார்வையையும் கொள்கைகளையும் உடையதாக கட்டமைக்கப்பட்டுள்ளது என்றார். இதுவே இந்தியாவை சக்திவாய்ந்த ஜனநாயகமாக உருவாக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே விமர்சனம் செய்பவர்களை எதிரிகளாகவோ தேச துரோகிகளாகவோ கருதக் கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் 2016ஆம் ஆண்டு அமெரிக்க காங்கிரஸில் பேசிய மோடி, கருத்துச்சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளே தனது அரசின் நிலைப்பாடு எனக் கூறியதை நினைவுகூர்ந்த சசி தரூர், பல சமயங்களில் உங்கள் அரசின் நடவடிக்கைகள் நீங்கள் சொல்லும் கருத்துக்கு மாறுபாடு இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அப்படியானால் இதுபோன்ற அடிப்படை பிரச்னைகள் மீதான உங்களின் கருத்தை மாற்றிவிட்டீர்களா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசுக்கு எதிராக விமர்சனம் எழுப்பும் குடிமகன்கள் மீது வழக்குப்பதிவு செய்வதுதான் உங்களின் புதிய இந்தியாவா, உங்களை எதிர்க்கும் அனைவரும் தேச துரோகிகளா, அரசின் குறைகளை சுட்டிக்காட்டும் பத்திரிக்கையாளர்கள் கைது செய்யப்படுவதுதான் புதிய இந்தியாவா என அடுக்கடுக்காடு கேள்விகளைத் தொடுத்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details