தமிழ்நாடு

tamil nadu

பதஞ்சலி சர்ச்சை: 100 விழுக்காடு தீர்வு; ஆய்வு மேற்கொண்ட மருத்துவர் உறுதி!

By

Published : Jun 27, 2020, 3:14 PM IST

Updated : Jun 27, 2020, 4:02 PM IST

பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் கரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாகவும், அது 100 விழுக்காடு வெற்றி கண்டுள்ளதாகவும் கூறினார். இதில் பல தரப்பிலிருந்தும் சர்ச்சை கருத்துகள் எழுந்தன. இச்சூழலில் ராஜஸ்தான் நிம்ஸ் மருத்துவக் கல்லூரி முதல்வர் கரோனா மருந்து குறித்து பேசியுள்ளார்.

பதஞ்சலி கரோனா மருந்து
பதஞ்சலி கரோனா மருந்து

கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க முதல் ஆயுர்வேத மருந்தை பதஞ்சலி நிறுவனம் கண்டுபிடித்துள்ளதாக யோகா குரு பாபா ராம்தேவ் ஜூன் 23 ஆம் தேதி அறிவித்திருந்தார்.

இந்த மருந்துக்கு கொரோனில் மற்றும் ஸ்வசரி (Coronil and Swasari) என பெயர் வைத்துள்ளதாகவும், மருத்துவ ரீதியிலான சோதனையில் 100 விழுக்காடு வெற்றியடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மருந்தின் மூலம் மிதமான அளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் 3 முதல் 7 நாள்களில் 100% பூரணகுணமடைந்து விடுவார்கள் என்றும், இந்த மருந்தை பதஞ்சலி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தனியார் மருத்துவ நிறுவனமான NIMS இணைந்து தயாரித்துள்ளதாகவும் பாபா ராம்தேவ் தெரிவித்திருந்தார்.

ஆனால் இது குறித்து தெரிவித்திருந்த ஆயுஷ் அமைச்சகம், உரிய பரிசோதனை முடிவுகள் வரும் வரையில் பதஞ்சலி நிறுவனம் அதனை கரோனாவுக்கான மருந்து என விளம்பரப்படுத்தக்கூடாது என தெரிவித்திருந்தது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தி, இருமல் மற்றும் காய்ச்சலுக்கான மருந்தை தயாரிக்க உரிமம் பெற்றுவிட்டு கரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ள பதஞ்சலி நிறுவனத்துக்கு, உத்தரகண்ட் ஆயுர்வேதத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்நிலையில், பாபா ராம்தேவ்-இன் கரோனா மருந்து குறித்து ராஜஸ்தான் நிம்ஸ் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் பிஎஸ் தோமர் ஈடிவி பாரத் செய்தி ஊடகத்தின் கேள்விகளுக்கு விளக்கமளித்தார்.

அதில், “கிலோய் துளசி, அஸ்வகந்தா போன்ற ஆயுர்வேத மருந்துகளை பதஞ்சலியில் இருந்து மட்டுமே எடுத்துக்கொண்டு, ஜெய்ப்பூரில் உள்ள நிம்ஸ் மருத்துவக் கல்லூரியில் உள்ள 100 கோவிட்-19 நோயாளிகளுக்கு சோதனை நடத்தப்பட்டது.

அறிகுறிகள் இல்லாத மற்றும் லேசான அறிகுறிகளுடன் இருந்த கோவிட்-19 நோயாளிகளுக்கு இந்த மருந்து கொடுக்கப்பட்டது. முடிவுகளின்படி, மூன்று நாள்களில் 65 நோயாளிகள் குணப்படுத்தப்பட்டனர். ஏழு நாள்களில் 100 விழுக்காடு நோயாளிகள் குணப்படுத்தப்பட்டனர்” என்று கூறினார்.

இந்த மருந்துக்கு அனுமதி கிடைத்துவிட்டதாக யோகா குரு பாபா ராம்தேவ் கூறியதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில், பதஞ்சலியுடன் இணைந்து ஆயுர்வேத மருந்தை சோதித்த தேசிய மருத்துவ அறிவியல் நிறுவனத்திற்கு (NIMS) ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஊரடங்கின் மத்தியில் உணவுப் பொருள் விலையை உயர்த்திய பதஞ்சலி நிறுவனம்!

Last Updated :Jun 27, 2020, 4:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details