தமிழ்நாடு

tamil nadu

கேரள தங்கம் கடத்தல் விவகாரம்: ராபின்ஸ் கே. ஹமீத்திற்கு ஏழு நாள் காவல்!

By

Published : Oct 28, 2020, 9:47 AM IST

கொச்சி: கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான ராபின்ஸ் கே. ஹமீத்திற்கு, தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றம் ஏழு நாள்கள் விசாரணை காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

கேரள தங்கம் கடத்தல்
கேரள தங்கம் கடத்தல்

கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் முவாட்டுபுழாவில் வசிக்கும் ஹமீத் (42) திங்கள் கிழமை துபாயில் இருந்து கொச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தபோது, அவர் தேசிய புலனாய்வு அமைப்பு அலுவலர்களால் கைது செய்யப்பட்டார்.

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில், இந்த ஆண்டு ஜூலை 5ஆம் தேதி சுங்கத்துறை அலுவலர்களால், ஐக்கிய அமீரகத்தின் பெயரில் வந்த பொருள்களில் இருந்து ரூ .14.82 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ரமீஸ் கே.டி., ஜலால் ஏ.எம். மற்றும் பலர், ஐக்கிய அமீரகத்தின் ராஜதந்திர சாமான்கள் மூலம் இந்தியாவுக்கு தங்கம் கடத்துவதற்காக நிதி ஏற்பாடு செய்தல், துபாயில் தங்கம் வாங்குதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டுவந்தது விசாரணையில் தெரியவந்தது.

இந்த வழக்கை விசாரித்துவரும் எர்ணாகுளத்தில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் ஹமீதுக்கு எதிராக ஜாமீனில் வெளிவரமுடியாத வாரண்ட் பிறப்பித்திருந்தது. அவர் ஐக்கிய அமீரகத்தின் பொருள்கள் மூலம் திருவனந்தபுரத்திற்கு சட்டவிரோதமாக தங்கம் கடத்த, மின் சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருட்களில் தங்கத்தை மறைத்து வைத்து அனுப்பியுள்ளது தெரியவந்தது.

கைது செய்யப்பட்டுள்ள ஹமீத் தங்கக் கடத்தலில் முக்கிய பங்கு வகித்தவர் என்றும் தங்கம் வாங்குவதற்காக பணம் முதலீடு செய்துள்ளார் என்றும் என்ஐஏ விசாரணைக் குழு நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியது. இதனையடுத்து, அவரை ஏழு நாட்கள் விசாரணை காவலில் வைக்க என்ஐஏ நீதிமன்றம் உத்தரவிட்டது.

ABOUT THE AUTHOR

...view details