தமிழ்நாடு

tamil nadu

சச்சின் நடவடிக்கைக்கும் என்னுடைய விடுதலைக்கும் தொடர்பு இருக்கிறதா? - கொந்தளிக்கும் உமர் அப்துல்லா

By

Published : Jul 21, 2020, 4:36 AM IST

ஸ்ரீநகர்: தன்னை விடுதலை செய்ததற்கும், சச்சினின் நடவடிக்கைகளுக்கும் சம்பந்தம் இருப்பதாக கூறும் குற்றச்சாட்டுகளுக்கு ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா மறுப்பு தெரிவித்துள்ளார்.

உமர் அப்துல்லா
உமர் அப்துல்லா

ராஜஸ்தானில் நொடிக்கு நொடி அரசியல் திருப்பம் அரங்கேறிவருகிறது. மாநிலத்தின் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதலமைச்சராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் நீண்ட நாள்களாக நிலவிவந்த பனிப்போர், சில நாள்களுக்கு முன் கடும் மோதலாக வெடித்தது. இதனால், பைலட் மாநிலத்தின் கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்தும், துணை முதலமைச்சர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார். பைலட் மூலம் ராஜஸ்தானில் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக திட்டம் தீட்டிவருவதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டிவருகிறது.

இதனிடையே, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்கள் ஃபருக் அப்துல்லா, உமர் அப்துல்லா ஆகியோர் வீட்டு காவலிலிருந்து விடுவிக்கப்பட்டதற்கும், சச்சினின் நடவடிக்கைகளுக்கும் சம்பந்தம் இருக்கிறது என சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடி தந்துள்ள உமர், பாகலுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நானும், எனது தந்தை ஃபருக் அப்துல்லாவும் வீட்டு காவலிலிருந்து விடுவிக்கப்பட்டதற்கும், சச்சின் பைலட்டின் சமீபத்திய நடவடிக்கைகளுக்கும் தொடர்பு இருப்பதாக எழுப்பப்படும் பொய்யான குற்றச்சாட்டுகளால் சோர்வடைந்துள்ளேன்.

இந்த குற்றச்சாட்டை முன்வைத்த பாகலுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்" என பதிவிட்டுள்ளார். உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் ஒரே சட்டப்பிரிவின் கீழ் கைதான நிலையில், முப்தி இன்னும் வீட்டு காவலில் வாடும்போது, உமர் மட்டும் எப்படி விடுவிக்கப்பட்டார். அப்துல்லாவின் தங்கையைதான் சச்சின் திருமணம் செய்துள்ளார் என்பதாலா? என பாகல் கூறியதாக செய்திகள் வெளியானது.

உமர் அப்துல்லாவின் தங்கை சாரா அப்துல்லாவை பைலட் திருமணம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details