தமிழ்நாடு

tamil nadu

நினைவிழக்கும் வரவர ராவ் - சிறையிலிருந்து விடுவிக்கக் கோரும் குடும்பத்தார்

By

Published : Jul 12, 2020, 6:08 PM IST

மும்பை: சிறையில் இருக்கும் சமூக செயற்பாட்டாளரான வரவர ராவின் உடல் நிலை மோசமான நிலையில் இருப்பதாகவும், அவருக்கு உடனடியாக மருத்துவ உதவி அளிக்க வேண்டும் எனவும் அவரின் குடும்பத்தார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வரவர ராவ்
வரவர ராவ்

மகாராஷ்டிரா மாநிலம் பீமா கோரேகான் பகுதியில் நடந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக கவிஞர் வரவர ராவ், வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், சமூக செயற்பாட்டாளர்கள் அருண் ஃபெரேரா, கவுதம் நவலகா, வெர்னான் கோன்சால்வ்ஸ் உள்ளிட்ட 11 போ் மீது அம்மாநில காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். பின்னா், அந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது.

இதனிடையே, 22 மாதங்களாக சிறையில் இருக்கும் வரவர ராவின் உடல்நிலை மோசமடைந்துவருவதாக அவரின் குடும்பத்தார் தெரிவித்துவந்தனர். இதனிடையே, வயது மூப்பு, உடல் நிலை, கரோனா பரவும் ஆபாயம் ஆகியவற்றை சுட்டிக்காட்டி பிணை கேட்டு அவர் சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். ஆனால், அவரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், 81 வயதான ராவ் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், அவருக்கு உடனடியாக மருத்துவ வசதி செய்துதர வேண்டும் எனவும் அவரின் குடும்பத்தார் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அவரின் குடும்பத்தார் வெளியிட்ட அறிக்கையில், "மும்பையின் தலோஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ள வரவர ராவின் உடல்நிலை குறித்து கவலைப்படுகிறோம். 2020 மே 18ஆம் தேதி தலோஜா சிறையில் இருந்து ஜே.ஜே. மருத்துவமனைக்கு மயக்க நிலையில் அவரை கொண்டு சென்றதிலிருந்து கடந்த ஆறு வாரங்களுக்கும் மேலாக அவரது உடல்நிலை மோசமான நிலையில் உள்ளது

மூன்று நாட்களுக்குப் பிறகு அவர் மருத்துவமனையிலிருந்து சிறைக்கு அனுப்பப்பட்டபோதும், அவரது உடல்நலத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. அவருக்கு இன்னும் அவசரகால சிகிச்சை தேவைப்படுகிறது.

இப்போதைய கவலைக்கு உடனடி காரணம் என்னவெனில், சனிக்கிழமை மாலை அவரிடமிருந்து வந்த வழக்கமான தொலைபேசி அழைப்பு ஆகும். அது எங்களை மிகவும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. ஜூன் 24 மற்றும் ஜூலை 2 ஆகிய தேதிகளில் வந்த இரண்டு அழைப்புகள் அவரது பலவீனமான மற்றும் குழப்பமான குரல், பொருத்தமற்ற பேச்சு கவலை அளிக்கிறது.

ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தெலுங்கில் சொல்திறமிக்க பேச்சாளராகவும், எழுத்தாளராகவும், நாற்பது ஆண்டுகளாக ஒரு தெலுங்கு ஆசிரியராகவும் செயல்பட்டவருக்கு, இந்த தடுமாற்றம், இயலாமை மற்றும் நினைவாற்றல் இழப்பு ஆகியவை பயமளிக்கின்றன.

ஆனால், ஜூலை 11ஆம் தேதி அழைப்பில், அவரது உடல்நிலை குறித்த நேரடியான கேள்விகளுக்கு பதிலளிக்காததும், அவரது தந்தை மற்றும் தாயின் இறுதிச் சடங்குகள், எழுபது ஆண்டுகள் மற்றும் நாற்பது ஆண்டுகளாக நடந்த நிகழ்வுகள் குறித்த பேச்சும் மிகவும் கவலை அளிக்கிறது. பின்னர் அவரது சக சிறைவாசி அவரிடமிருந்து தொலைபேசியை எடுத்து, அவரால் நடக்க, கழிப்பறைக்குச் சென்று பற்களைத் துலக்க முடியவில்லை என்று எங்களுக்குத் தெரிவித்தார்.

மேலும், அவர் விடுவிக்கப்படுவதால் அவரை வரவேற்க நாங்கள், குடும்ப உறுப்பினர்கள், சிறை வாசலில் காத்திருக்கிறோம் என்ற பிரமையில் அவர் எப்போதும் இருக்கிறார் என்றும் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அவரின் உடல் மற்றும் நரம்பியல் பிரச்னைகளுக்கு உடனடி மருத்துவ பராமரிப்பு தேவை என்றும் அவரது சக சிறைவாசி கூறினார். குழப்பம், நினைவாற்றல் இழப்பு மற்றும் சீரற்றதன்மை ஆகியவை எலக்ட்ரோலைட் ஏற்றத்தாழ்வு, சோடியம் மற்றும் பொட்டாசியம் அளவின் வீழ்ச்சியின் விளைவாக மூளை பாதிப்புக்கு வழிவகுக்கும்.

இந்த எலக்ட்ரோலைட் ஏற்றத்தாழ்வு கூட ஆபத்தானது. தலோஜா சிறை மருத்துவமனை மருத்துவ நிபுணத்துவம் அல்லது உபகரணங்களில் இந்த வகையான கடுமையான நோய்களைக் கையாள போதுமானதாக இல்லை. இதனால் அவரது உயிரைக் காப்பாற்றவும், எலக்ட்ரோலைட் ஏற்றத்தாழ்வு காரணமாக மூளை பாதிப்பு மற்றும் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் தடுக்கவும் அவர் ஒரு முழுமையான வசதிகள் கொண்ட சிறப்பு மருத்துவமனைக்கு மாற்றப்பட வேண்டும்.

தற்போதைய சந்தர்ப்பத்தில், அவருக்கு எதிரான வழக்கு இட்டுக்கட்டப்பட்டது போன்ற அனைத்து பொருத்தமான உண்மைகளையும் நாங்கள் ஒதுக்கி வைக்கிறோம். அவர் 22 மாதங்கள் சிறையில் விசாரணை சிறைவாசியாக கழிக்க வேண்டியிருந்தது, இந்த செயல்முறையே தண்டனையாக மாறியது; அவரது ஜாமீன் மனுக்கள் குறைந்தது ஐந்து தடவைகள் நிராகரிக்கப்பட்டது, மேலும் அவரது வயது, உடல்நலக்குறைவு மற்றும் கோவிட் பாதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தொடுத்த பிணை மனுக்கள் கூட புறக்கணிக்கப்பட்டன.

அவரது உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பதே எங்களது தற்போதைய கோரிக்கை. அவரை ஒரு சிறந்த மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் அல்லது தேவையான மருத்துவ சேவையை வழங்க அனுமதிக்குமாறு நாங்கள் அரசை கேட்டுக் கொள்கிறோம். எந்தவொரு நபரின் வாழ்க்கைக்கான உரிமையை மறுக்க உரிமை இல்லை, அவர் விசாரணை சிறைவாசியாக இருப்பதை அரசுக்கு நினைவூட்ட விரும்புகிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2017, டிசம்பர் 31ஆம் தேதி, எல்கர் பரிஷத் அமைப்பு சார்பாக ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. அந்த கருத்தரங்கில், வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக வரவர ராவ் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், பீமா கோரேகான் பகுதியில் நடைபெற்ற வன்முறைக்கு காரணம் இவர்களின் பேச்சுதான் எனவும் காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டது.

ஆனால், கைதானவர்கள் அனைவரும் ஒடுக்கப்பட்ட, பழங்குடியின மக்களின் உரிமைக்காக போராடுபவர்கள் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, சுதா பரத்வாஜ், அமெரிக்காவில் பிறந்திருந்தாலும், இந்தியாவுக்கு திரும்பி, புகழ்பெற்ற ஐஐடியில் படித்தவர். பின்னர், வழக்கறிஞர் படிப்பை முடித்துவிட்டு தலித் மக்கள், தொழிலாளர்களின் நலனுக்காக போராடிவருகிறார்.

இதையும் படிங்க: கௌதம் நவ்லகாவை மும்பைக்கு அழைத்துச்சென்ற என்ஐஏ-வுக்கு நீதிமன்றம் கண்டனம்

ABOUT THE AUTHOR

...view details